Feb 6, 2011

பஞ்ச் ரத்தினம்

1) பாலியல் வக்கிரங்கள்

பாக்யா வார இதழில் பாலியல் வக்கிரங்கள் என்ற எனது தொடர். சாம்பிள் இதோ!

2) ஆர்வம் இருந்தும் செயல்பட முடியாமை

அதீதம் என்னும் பத்திரிக்கைக்கும் எனக்கும் இடையே நடந்த கடிதப் போக்கு வரத்து கீழே!

அதீதம்:

வணக்கம்.

பொங்கல் முதல் வெளியாகியிருக்கிற அதீதம் இதழுக்காக ஒரு புதிய தொடரை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். அதன் பொருட்டே இம்மடல்.

வெகு வருடங்களாக இணைய உலகைக் கவனித்து வந்து, திறனுடைய பலரையும் இன்னும் கொண்டு சேர்க்கும் வண்ணமும், புதியவர்களோடு சில பிரபலங்களும் எழுதுகையில் அந்தப் புதியவர்களுக்குக் கிடைக்கும் உத்வேகத்தையும் கருத்தில் கொண்டே இந்த இதழ் துவங்கப்பட்டுள்ளது.

ஆனால் - இணையத்தைக் கவனித்த வரை வார்த்தைக் கோர்வையின்மை, எழுத்துப் பிழை, சந்திப்பிழை என பலதும் மலிந்து காணப்படுகின்றன. நாங்கள் கணித்தவரையில் இவையேதும் இல்லாமல் எழுதும் அரிதான சிலபேர்களில் நீங்கள் முக்கிய இடத்தில் இருக்கிறீர்கள்.

உங்கள் பல வருட எழுத்துலகின் அனுபவத்தையும், அச்சு இதழ்களில் கோலோச்சிக் கொண்டிருக்கும் உங்கள் திறனையும் எங்களுக்காக ஒரு தொடர் எழுதித் தருவதில் செலுத்துவீர்களாயின் மிகவும் மகிழ்வோம்.

எங்கள் மனதில் இருப்பது: தவறில்லா தமிழோடு தெளிவான நடையோடுஎன்கிற தலைப்பில் ஒரு உதாரண பத்தியை தப்பும் தவறுமாக எழுதி, அதில் என்னென்ன தவறுகள் என்பதைச் சொல்லி கட்டுரையின் முடிவில் அதே பத்தியை சரியான முறையில் எழுதுவது எப்படி என்று சொல்ல வேண்டும்.

உதாரண பத்தி ஒரு பத்து வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. சுவாரஸ்யமாக அந்தப் பத்தி இருப்பின் வாசகர்களை எளிதில் கவரும் என்பதைத் தங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை!

புதிய இதழாகையால் தற்போது சன்மானமேதும் அளிக்கும் நிலையில் நாங்கள் இல்லை. நண்பர்களின் ஒத்துழைப்பில்தான் அதீதம் மலர்ந்திருகிறது. தாங்களும் ஒத்துழைப்பீர்களென நம்புகிறோம். எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்

......................

அதீதம் இதழுக்காக

நான்:

அன்புடையீர்!

வணக்கம். தங்களது மின் மடலைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.

தங்களின் அதீதம்இதழ் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.

மாதிரி இதழ் ஒன்றினை எனக்கு அனுப்புவீர்களேயானால் சில காரணிகளைக் கணிக்கவும், எனது எழுத்தின் நடை, மற்றும் கருத்துக்களை அதீதத்துக்குஏற்ற வகையில் அளிக்கவும் இயலும்.

எனது அலைபேசி எண் .................

இதில் தொடர்பு கொண்டு எனது அஞ்சல் முகவரியைப் பெற்று ஓர் இதழை எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.

தங்கள் அன்புள்ள,

லதானந்த்

அதீதம் :

அன்பின் லதானந்த்

மன்னிக்க.

அதீதம் இதழுக்கான இணைப்பைக் குறிப்பிடாமல் விட்டமைக்கு. மேலும் அது ஓர் இணைய இதழ் என்பதையும் எங்கேயும் சொல்லாததற்கு!

www.atheetham.com

நன்றி.

அன்புடன்

.............................

நான் :

அன்புடையீர்!

தங்களின் மின்னிதழ் பார்த்தேன்.

நன்றாக இருக்கிறது.

வாழ்த்துக்கள்.

தற்போது பணிச் சுமை அதிகம் இருக்கிறது. அது கொஞ்சம் குறைந்தவுடன் தங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்கிறேன்.

அன்புள்ள,

லதானந்த்

பணிச் சுமை அதிகம் என்பதால் ஆர்வம் இருந்தும் மின்னிதழுக்கு இப்போது எழுத முடியவில்லை என்பதில் எனக்கு லேசாக வருத்தம்தான்.

3) கடன்பட்டார் நெஞ்சம்

பொதுவாவே கடம் வாங்கறதில்ல குடுக்கறதில்லைங்கற ப்ரின்சிபிள் நம்முளுது. ஆனலும் பாருங்க சில தடவ கடம் வெச்சர்ர மாதிரி ஆயிருது. கடம்னா நெச நெசக் கடனெல்லாம் இல்ல. நெம்ப நாளுக்கு முந்தி நான் ஒரு வெண்பாப் போட்டி வெச்சிருந்தன். அதுல மொதோ ப்ரைஸ் அகரம் அமுதாவுக்கும் (அப்பா சாமிகளா! ரவுண்டு கட்டீராதீங்க! அகரம் அமுதாங்கிறது ஆம்பிளை) ரண்டாவது ப்ரைஸ் ஷைலஜாவுக்கும் கெடைச்சது. ரண்டு பேருக்குமே ப்ரைஸக் குடுக்காம இருந்ததால நெம்ப சங்கடமா இருந்துச்சு. சித்த நாளு முந்திக் கோயமுத்தூருக்கு ஷைலஜா வந்திருந்தாங்க. என்னைய நாவல்கள் எழுதச் சொல்லி நெம்ப வற்புறுத்துனாங்க. சிறுகதைகள் பத்தி நல்லா டிஸ்கஸ் பண்ணுனாங்க. அப்பம் அவிங்களுக்கு ரண்டாவது ப்ரைஸைக் குடுத்திட்டன். அகரம் அமுதாவுக்கும் (அகரம் அமுதா ஆம்பிளை. சரியா சாமிகளா!) மொதோ ப்ரைஸைக் குடுத்திட்டன்னா இந்தக் கட்டை நிம்மதியா வேகும்.

4) மின்னல்

இந்த வாரம் குங்குமத்தில் “மின்னல்” பற்றி ”எனப்படுவ”தில் எழுதியிருந்தேன். சென்ஸார் செய்யபட்டு விட்ட கடைசிப் பத்தி எனதருமை வலைப்பூ அன்பர்களுக்காகக் கீழே கொடுத்திருக்கிறேன்.

”தலையில் அடித்துக்கொள்ள வைக்கும் ஒரு நிகழ்ச்சி. ஜெர்மனியைச் சேர்ந்த ராண்டி ஜென்ஸ் கோட்லிப் மற்றும் அவரது கேர்ள் ஃபிரண்ட் லிசா க்ரூன் இருவரும் கார் மூலம் ஒரு ஹைவேயில் பயணம் செய்தனர். மூடு வந்ததால் காரை ஓரமாக நிறுத்திவிட்டுப் பக்கத்தில் இருந்த புதர்க் காட்டுக்குள் கொஞ்ச தூரம் நடந்து போய் காதல் மழையில் குளிக்க ஆரம்பித்தபோது நிஜ மழையே கொட்ட ஆரம்பித்துவிட்டது. போதாக் குறைக்கு இவர்கள் சங்கமித்திருந்த இடத்துக்கு சில அங்குலங்கள் தூரத்தில் மின்னல் வேறு பாய்ந்துவிட்டது. அலறி அடித்து எழுந்த இருவராலும் கொட்டும் மழைக்கிடையில் தங்கள் காரை நிறுத்திய இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வழியாக ஹைவேக்கு வந்த அவர்களைக் காரை ஓட்டி வந்த ஒருவர் அதிர்ச்சியுடன் கவனித்து லிஃப்ட் கொடுத்தார். அதற்கு முன் கைவசம் இருந்த துணிகளைக் கொடுத்து அழைத்து வந்தாராம்.”

”அது சரி! பத்திரிக்கைல வர்ரதைப் பதிவாகவும் போட்ருவியே? இப்பம் எதுக்கு இதை மட்டும் போட்ருக்கே?”னு சந்தேகம் வரலாம். அடுத்த ரத்தினத்தப் படியுங்கள். சந்தேகம் தீரும்.

5) மூடு விழா

பல்வேறு பணிகளுக்கிடையில் வலைப் பூவில் கடந்த சில மாதங்களாகவே அதிகமாக எழுத இயலாமல் இருந்தது. அனாலும் எனது எழுத்துக்களை ஆவணப் படுத்தி வைக்கும் களமாக வலைப் பூவைப் பயன்படுத்தி வந்தேன். கொஞ்ச நாளைக்குப் பொதுப் பார்வைக்கு அளிக்காமல் ஆவணப் படுத்துவதை மட்டும் தொடர்ந்து செய்தால் என்ன என்ற ஒரு சிந்தனை ஓடிக் கொண்டிருக்கிறது. சில இலக்குகளை அடைந்த பிறகு மீண்டும் பொதுப் பார்வைக்கு எனது இடுகைகள் வரும். சஞ்சய் கந்தி போன்ற கணிப் பொறி வல்லுநர்களின் உதவி கிடைத்தால் எனது வலைப் பூவுக்குக் கொஞ்ச நாள் மூடு விழா நடத்த உத்தேசித்திருக்கிறேன். (சாதாரண நாளிலேயே பிஸியாக இருப்பதாக சஞ்சய் காட்டிக் கொள்ளுவார். இப்போது கேட்க வேண்டுமா?)

என் வலைப் பூவைப் படித்தே ஆக வேண்டும் என்ற நம நமப்பு உள்ளவர்கள் எனக்கு ஈமெயிலில் தெரிவித்தால் இடுகைகளை அவர்களின் தனிப் பார்வைக்கு அனுப்புகிறேன். யாவற்றுக்கும் வந்தனம். வரட்டுங்களா?

********************************************************************************Jan 31, 2011

நிழல் பார்ட் II

கேரளாவின் சிறந்த இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். இவர் இயக்கிய கடைசிப் படம் நிழல் கூத்து. இதில் முக்கியப் பாத்திரத்தில் நடிப்பவர் ஆரச்சார் என்னும் பணியைச் செய்பவர். ஆரச்சார் என்பது குற்றவாளிகளைத் தூக்கில் போடும் வேலை. காரியம் முடிந்ததும் தூக்குக் கயிற்றைப் பூசையில் வைத்துப் பின்னர் எரித்து அந்தச் சாம்பலை விபூதி மாதிரி நோயாளிகளுக்குக் கொடுப்பார். நிரபராதி ஒருவரைத் தூக்கில் போட வேண்டிய சந்தர்ப்பத்தில் அதை மறுத்து மாரடைப்பால் அவர் உயிர் பிரிவதாகக் கதை அமைக்கப்பட்டிருக்கும்.


ரஸ்ஸல் மல்காஹி என்பவரால் டைரக்ட் செய்யப்பட்டு, 1994ஆம் ஆண்டில் வெளியான அமெரிக்க அதிரடி ஆக்‌ஷன் படம் தி ஷேடோ. 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவானது. இதில் கதாநாயகனாக நடிக்கும் அலெக் பால்ட்வின் தன் உருவத்தை மறைத்துக் கொள்ளும் வித்தையைக் கற்றுக்கொள்கிறார். ஆனால் அவரது நிழல் மட்டும் பிறருக்குத் தெரியும்.


இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் படத்தில் ஒரு காட்சியில் கதாநாயகன் அவன் நிழலை விட வேகமாக விழுவதுபோலக் காட்டுவார்கள்.மெக்கன்னாஸ் கோல்ட் என்ற ஆங்கிலப் படத்தில் தங்கம் புதைந்திருக்கும் பகுதியை நிழல் அடையாளம் காட்டுவதாக வரும் காட்சி அற்புதமாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கும். செல்வராகவன் இயக்கி வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் படத்திலும் சிவபெருமானின் சிலையின் நிழல் புதை குழியில் விழாமல் கடக்க உதவுவதாக ஒரு காட்சி இருக்கும்.


கே.பாலசந்தரின் இயக்கத்தில் கமல், சரத் நடித்த நிழல் நிஜமாகிறது அந்தக் காலத்தில் மிகவும் பேசப்பட்ட திரைப்படமாகும்.


கே.பி.யின் மற்றொரு படம் நூல் வேலி. இதில் Hand Shadowgraphy என்ற உத்தியைப் பயன்படுத்தியிருப்பார். கைவிரல்களின் நிழல்கள் மூலம் பலவித நிழல் வடிவங்களைத் தோற்றுவிக்கும் கலைதான் அது. படத்தில் சரிதா இதைச் செய்வார்.ஷேடோகிராஃப் என்பது வேறு. உதாரணமாக ஒரு துப்பாக்கியிலிருந்து ஒரு புல்லட் வெளியேறும்போது காற்றில் அது அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. அது கண்ணுக்குத் தெரியாது. ஆனால் அந்த அலைகளின் நிழலைப் பார்க்கலாம். இவ்வகையான நிழல்கள் காற்று, நீர், மற்றும் கண்ணாடி போன்ற ட்ரான்ஸ்பரன்ட் ஊடகங்களில் தோன்றும். இந்த ஷேடோகிராஃப் தொழில் நுணுக்கத்தைப் பயன்படுத்தி அனிமேஷன் துறையும் வளர்ந்தது. 1936ல் வால்ட் டிஸ்னியால் வெளியிடப்பட்ட Three Blind Mouseketeers படம் பெரிதும் வியப்புடன் பார்க்கப்பட்டது.கடல்வாழ் உயிரினங்கள் சில தங்கள் இரையைப் பிடிக்க இந்த டெக்னிக்கைப் பின்பற்றுகின்றன. கடல் நீரில் இரையைக் கண்டுபிடிக்க முடியாதபடி இரையும் கடல் நீரும் ஒருமித்துக் காணப்படும். ஆனால் கடலின் தரைப் பரப்பில் தெரியும் இரையின் நிழலைக் கொண்டு இருப்பிடத்தைச் சரியாகக் கணக்கிட்டுப் பெரிய உயிரினம் இரையை ‘லபக்’ செய்துவிடும்.ஓம்ப்ரோமேனி (ombromanie) என்று என்று ஒரு கலை. கை மற்றும் விரல்கள் மூலம் ஒரு கதையையோ அல்லது சம்பவத்தையோ கலைஞர்கள் சொல்வதுண்டு. ஃபெலிஷியன் ட்ரிவே என்னும் பிரஞ்சுக்காரரால் 19ம் நூற்றாண்டில் ஐரொப்பாவெங்கும் பரப்பப் பட்டது இந்த நிழற் கலை.லண்டனில் உள்ள வாழ்த்து அட்டைகள் தயாரிப்பு நிறுவனமான E.T.W. Dennis & Sons Ltd 1950களில் வெளியிட்ட வாழ்த்து அட்டைகளில் சாதாரணமாக ஒரு படம் தெரியும். அதையே சூரிய ஒளியில் காண்பித்தால் நிழலில் கிளுகிளு படங்கள் தெரியும்.நிழல் மூலம் நிகழ்த்தப்படும் தோல்பாவைக் கூத்து என்பதும் பழங்காலம்தொட்டு உள்ள ஒரு கலையே! தோல் பாவைகளில் நிரம்பத் துளைகள் இடப்பட்டிருக்கும். அவற்றின் வழியே ஒளி பாய்ச்சப்படும்போது எதிரே உள்ள திரையில் பாவைகளின் நிழல் அழகாகத் தெரியும். தோல் பாவைகளை அசைத்துக் கதை சொல்லும் தோல்பாவைக் கூத்து நசித்து வரும் ஓர் அரிய கலையாகும்..ஸ்விட்சர்லாந்து நாட்டின் லூசர்ஸன் நகரில் உள்ள புகழ் பெற்ற நினைவுச் சின்னம் Lion monument. பிரஞ்சு நாட்டுக்காககப் போராடி உயிர் துறந்த ஸ்விஸ் வீரர்களின் நினவாக உருவாக்கப்பட்டது இது. 1800ல் டேனிஷ்காரர் ஒருவரால் வடிவமைக்கப்பட்ட இந்தச் சிங்கம் ஒரு குகைபோன்ற அமைப்பினுள் இருக்கும். விசேஷம் என்னவென்றால் சிங்கத்தின் நிழல் ஒரு பன்றியைப் போலிருக்கிறது!
செயற்கைக் கோளில் இருந்து எடுக்கப்படும் புகைப்படங்களில் உயரமான கட்டிடங்கள் அவற்றின் நீண்ட நிழல்கள் மூலமே இனம் காணப்படுகின்றன.சில சமயங்களில் வெளிச்சதோடு தொடர்பில்லாத வேறு பொருள்களிலும் நிழல் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.


ஒரு மலை அல்லது குன்றின் ஒரு பக்கத்தில் மழை பெய்யும். மறு பக்கத்தில் மழை இருக்காது. இந்த மழை கிடைக்காத வறண்ட பகுதி மழை நிழற் பகுதி எனப்படும்.


அக்வஸ்டிக் ஷேடோ என்றும் ஒரு சொல் புழக்கத்தில் இருக்கிறது. எப்படி ஒளியின் பாதையில் இடையூறு ஏற்பட்டால் அது தடுக்கப்படுகிறதோ அதே போல ஒலியின் பாதையில் இடையூறு ஏற்படும்போது ஒலி கேட்க முடியாததாகி விடுகிறது. இதைத் தான் அக்வஸ்டிக் ஷேடோ என்பார்கள்.


அமெரிக்க உள்நாட்டுப் போர் மிஸிஸிப்பி அருகேயுள்ள ஐயூகா என்ற இடத்தில் 1862 செப்டம்பரில் நடந்தது. அமெரிக்கப் படைகளுக்கும் கான்ஃபெடெரேட் படைகளுக்கும் இடையே நடந்தது அந்தப் போர். அயூக்காவில் அமெரிக்கப் படையை வழிநடத்திச் சென்று கொண்டிருந்த எஸ். ரோஸ்க்ரான்ஸ் என்பவருக்கு உதவியாக யூலிஸிஸ் எஸ்.கிரான்ட் என்ற அமெரிக்கத் தளபதி, தென்மேற்கிலிருந்தும் எட்வர்ட் ஓ.ஸி. ஓர்ட் என்ற இன்னொரு அமெரிக்கத் தளபதி, வட மேற்குப் பக்கத்திலிருந்தும் ஐயூக்காவில் போர் ஆரம்பித்த ஒலி கேட்டவுடன் கன்ஃபெடெரேட் படைகளைத் தாக்குவது எனத் தீர்மானித்துக் கொண்டனர். ஆனால் சண்டையின் ஒலி அவர்களுக்குக் கேட்காதபடி அக்வஸ்டிக் நிழல் தடுத்து விட்டதால் அமெரிக்கத் தளபதிகளால் தாங்கள் நினைத்தபடி தாக்குதலை நிகழ்த்த இயலாமல் போயிற்று.


பொருளாதாரத்தில் ஷேடோ பேங்கிங் சிஸ்டம் என்ற ஒன்று உண்டு. முதலீட்டாளர்களையும் பணம் தேவைப்படுவோரையும் இனங் கண்டு இருவரின் தேவைகளையும் பூர்த்தி செய்து அதற்குக் கட்டணமாக இருவரிடமும் ஒரு தொகையைப் பெறுவது இந்நடைமுறை. 2000 முதல் 2008 வரையிலான காலகட்டங்களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இந்நடைமுறை மிகவும் பிரபலம் அடைந்தது.


ஷேடோ காப்பி என்பது மைக்ரோசாஃப்ட் விண்டோஸில் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பம். ஸ்னாப் ஷாட் களில் உள்ள தகவல்களை சேமிக்க உதவுவது இது.


மறைபொருளான காரியங்களைச் செய்பவர்களை நிழல் மனிதர்கள் என்பார்கள்.சில தலைவர்களுடனேயே எப்போதும் ஒன்றாக உலா வருபவர்களை அத்தலைவரின் நிழல் என்பார்கள்.தங்களின் செல்வாக்கால் உயர் பதவியில் இருக்கும் சிலரின் பதவிக்குண்டான அதிகாரங்களைத் செயல்படுத்த வேறு சிலர் முனைவதும் உண்டு. அவர்களை அப்பதவியின் நிழல் எனச் சொல்வார்கள்.நேரடியாக மோதாமல் மறைமுகத் தாக்குதல் செய்வோரை நிழல் யுத்தம் நடத்துகிறவர் என்று சொல்வார்கள்.’நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்’ எனபது நிழல் தொடர்பான பழமொழி.வாகனங்களை வெய்யிலில் நிறுத்துவதால் அவற்றின் வண்ணம் மங்கிப் போகும் என்பதால் வாகன உரிமையாளர்கள் நிழலிலேயே நிறுத்த விரும்புவார்கள்.மரங்கள் அனைத்தும் நிழல் தருவன என்றாலும் ஆலமரம் போலப் பரந்து விரிந்த நிழல் தருவனவும் உண்டு. பனை போலக் குறுகிய நிழல் தருவனவும் உண்டு.Prosopis juliflora என்ற தாவரவியல் பெயர் கொண்ட வேலிக்கருவேல் மரத்தின் நிழலில் வேறு வகைத் தாவரங்கள் வளர்ச்சி குன்றியே காணப்படும்.நாவல் போன்ற சில தாவரங்களை நிழல் விரும்பிகள் (Shade lovers) என்பார்கள். நிழலிலும் நன்கு வளரக் கூடியன இவை.தேக்கு போன்றவற்றின் வளர்ச்சி அவை நிழலில் இருந்தால் பெரிதும் குறைந்துவிடும்.இறுதியாக “அந்த”த் தகவல் இல்லாமல் நிழல் நிறைவடையாது அல்லவா? சொல்கிறேன். ஷேடோ செக்ஸ் விளையாட்டுக்கள் மேல் நாடுகளில் பிரபலம். இதில் காதலர்கள் விளக்குகள் முன் நின்று தங்கள் நிழல்களைச் சுவரில் தெரிய வைப்பார்கள். கட்டளைகளுக்கு ஏற்ப அவர்கள் நிழல் மூலம் சுவரில் பல வித பொஸிஷன்களைத் தோற்றுவிக்க வேண்டும். இந்த விளையாட்டின் நோக்கம் பொழுதுபோக்கு மட்டுமல்ல. காதலர்களுக்கு நீண்ட நேர ’முன்விளையாட்டு’க்களைத் தருவதும் அதன் தொடர்ச்சியாகப் பரவசத்தை அடைய வைப்பதும்தான்.
*********************************************************************
Jan 27, 2011

மெமரி பூஸ்டர் 2
(2)

Memory is everyone’s friend – it leaves you when you need it most

ஸ்பெயின் நாட்டுப்பழமொழிபழமொழி

என்னத்தக் கன்னையா என்று ஒரு நடிகர் இருந்தார். ஒரு திரைப்படத்தில் எந்த ஒரு விஷயத்தை அவரிடம் சொன்னாலும், “என்னத்த செஞ்சு என்னத்த ஆகப் போகுது?என்று அவநம்பிக்கையாகவே அடிக்கடி பேசும் பாத்திரத்தில் நடித்ததால் அவருக்கு அந்தப் பெயர் ஏற்பட்டது. அவரைபோல, “என்னத்தப் பயிற்சி செஞ்சு என்னத்த நினைவாற்றலை அதிகப்படுத்துறது?என்ற மனோபாவம் கூடாது.

நிச்சயம் என்னாலும் நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ள முடியும் என்ற ஒரு நேர்மறை எண்ணத்தோடு வழிமுறைகளைக் கற்றுக் கொள்ளுவோம்.

மாணவர்கள் படிக்க அமரும்போது தங்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் படிக்கிற பாடங்களின்மேல் செலுத்த வேண்டும். ஐம்புலன்களும் படிக்கிற விஷயத்தில் இருக்க வேண்டுமே தவிர கவனச் சிதறல் கூடவே கூடாது

உதாரணமாக ஒரு பாடத்தைப் படிக்கும் வேளையில் சமையலறையிலிருந்தோ டைடனிங் ஹாலில் இருந்தோ கமகமக்கும் குருமா வாசம் வீசினால் நிச்சயம் படிக்கிற விஷயம் மனதில் இருந்து கசிய வாய்ப்பிருக்கும்.

சில மாணவர்கள் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்து கொஞ்ச நேரம் கிரிக்கெட் மேட்சையும் கொஞ்ச நேரம் பாடம் படிப்பதையும் செய்வதைப் பார்க்கலாம். பேசாமல் கிரிக்கெட்டைக் கொஞ்ச நேரம் நிம்மதியாகப் பார்த்துவிட்டு டீவியை அணைத்துப் பிறகு படிக்க ஆரம்பிப்பது நல்ல பலனைக் கொடுக்கும்

இன்னும் சில பேர் ஏதாவது கொறித்துக் கொண்டே பாடம் படிப்பார்கள். மூளையில் உள்ள நியுரோ ட்ரான்ஸ்மிட்டர்கள் தின்பண்டத்தின் சுவைக்கும் பாடத்துக்கும் தனது நினைவிறுத்தும் திறனைப் பங்கிட்டுக் கொடுக்கும். எனவே படிப்பது நினைவில் தங்குவது குறையும்.

இயர் ஃபோனைக் காதில் மாட்டிகொண்டு படித்தால் சங்கீதமும் மனதில் நிற்காது. பாடமும் மனதில் ஏறாது.

குழந்தைகளைத் தட்டிக் கொடுத்துக் கொண்டோ நண்பனுடன் விளையாடிக் கொண்டோ படிப்பதும் எதிர்பார்க்கும் விளைவுகளைத் தராது.

எந்தவிதக் கவனச் சிதறலும் இல்லாமல் அமைதியாக மனதை ஒருமுகப் படுத்தினால் மட்டுமே படிப்பதை நினைவில் பதிக்க இயலும்.

ஆமாம். கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். இப்பொழுது சிரமம் பார்க்காமல் இந்தத் தொடரில் சொல்லப்படும் வழிமுறைகளைப் பின்பற்றினால் நினைவாற்றல் மேம்படும். தேர்வில் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். மேற்படிப்பில் தரமான கல்லூரியில் சிறப்பான பிரிவைத் தேர்ந்தெடுக்கலாம். நல்ல வேலையில் அமரலாம். அட்டகாசமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது.

நினைவாற்றல் பயிற்சிகள் ஆரம்பத்தில் கடினமாகத் தோன்றலாம். முயற்சியும் பயிற்சியும் இருந்தால் பிரகாசமான எதிர்காலம் கைகூடும் என்ற நம்பிக்கையோடு அடுத்த விஷயத்தைப் பார்ப்போம்.

படிக்கின்ற சூழல் என்பதும் மிக முக்கியமான ஒன்று. மனசுக்குள் படிப்பதே நல்லது என்றாலும் லேசாக முணுமுணுப்பதில் தவறே இல்லை. உங்கள் குரலை நீங்களே கூர்ந்து கேட்பது தேர்வின்போது படித்தைத் திரும்ப எழுத்து வடிவில் கொண்டுவரக் கூடுதல் பங்களிப்பைத் தரும்.

சிரமம் தராத வசதியான இருக்கை, சரியான கோணத்தில் கிடைக்கும் உரிய வெளிச்சம், காற்றோட்டமான சுற்றுப் புறம் போன்றவை நாம் படிக்கின்ற விஷயங்களில் மட்டும் நாம் கவனம் செலுத்தப் பெரிதும் உதவும். இவற்றை அமைத்துத் தருவதில் பெற்றோரின் பங்கும் மிக அதிகம்.

தீவிரமாகப் படித்துக் கொண்டிருக்கும் மாணவனை, “டேய் சீனு! போய் ஒரு கிலோ கடலை மாவு வாங்கிட்டு வாடா! ஒங்கப்பாவுக்கு பஜ்ஜி சாப்டணும்போல இருக்காம்என்று விரட்டினால் நிச்சயம் நினைவில் இருத்தும் ஆற்றல் குறையவே செய்யும்.

கம்பைன் ஸ்டடி என்பது ஒரு ஃபேஷனாக இப்போது நிலவுகிறது. இரண்டு மாணவர்கள் தனித் தனியே ஒரு குறிப்பிட்ட பாடத்தை நன்கு படித்துவிட்டுப் பின்னர் இருவரும் சேர்ந்து அந்தப் பாடத்தைப் பற்றி விவாதிக்கும்போது ஒருவர் இன்னொருவருக்கு உதவியாகவும் மறந்துபோன பாயின்டுகளை எடுத்துக் கொடுக்கவும் வாய்ப்புண்டு.

ஓர் ஆராய்ச்சி எலுமிச்சையில் செய்தார்களாம். அளவில் பெரியதாக ஆனால் விதைகள் ஏராளம் கொண்ட ரகத்தையும் அளவில் சிறியதாக ஆனால் மிக மிகக் குறைவான் விதைகள் கொண்ட ரகத்தையும் கலப்புச் செய்து புதிய ரகத்தை உற்பத்தி செய்தார்களாம் விஞ்ஞானிகள். அவர்களது எதிர்பார்ப்பு என்னவென்றால் பழமும் பெரிதாக இருக்க வேண்டும் விதைகளும் மிகக் குறைவாக இருக்கவேண்டும். கலப்பின் விளைவாகக் கிடைத்தது என்ன தெரியுமா? பழமும் சின்னது. விதைகளோ எக்கச்சக்கம். உங்கள் கம்பைன் ஸ்டடி இந்த மாதிரி ஆகிவிடக் கூடாது. சரிங்களா?

(தொடரும்)
Jan 26, 2011

சுற்றுலா

வால்பாறை சுற்றுலாவுக்கு இவ்வளவு ஆர்வம் காட்டுவீர்கள் என நான் எதிர்பார்க்கவேயில்லை.

டென்டேட்டிவ் ப்ரோகிராம் இதுதான்.

சனிக்கிழமை காலை கோவையில் இருந்து வாடகை வாகனம் மூலம் வால்பாறை செல்லுதல்.

அன்று மாலை வரை சில இடங்களைச் சுற்றிப் பார்த்தல்.

பின்னர் வன உயிரினம் தொடர்பான ஒரு வல்லுநர் (நானில்லை) பவர் பாயிண்ட் மூலம் அரிய செய்திகளை விளக்குவார்.

அதன் பிறகு முடிந்தால் ஒரு கேம்ப் ஃபையர் ஏற்பாடு செய்யப்படும்.

பதிவர்களின் தனித் திறமைகள் (பாடல், மிமிக்ரி, நகைச்சுவை போன்ற எதேனும் இருந்தால்) அதை வெளிப்படுத்தலாம்.

ஞாயிறு மாலை வரை சில இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு இரவு கோவைக்குப் புறப்படுதல்.

கோவை வந்து சேர இரவு 10 மணிக்கு மேலாகும்.

இது குடும்பச் சுற்றுலா.

உற்சாக பானம் தடை செய்யப் பட்டுள்ளது.

இயன்றவரை குழந்தைகளையும் அழைத்து வாருங்கள்.

ட்ரக்கிங்கில் நடக்க முடியாதவர்கள் முன்கூட்டித் தெரிவிக்கலாம். அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் (முடிந்தால்) செய்யப்படும்.

வால்பாறையில் தங்கும் இடம் மற்றும் வனப் பகுதிகளுக்குள்ளாகச் செல்வது தொடர்பான அனுமதி பெறுவது எனது பொறுப்பு.

இது தொடர்பான மேல் விவரங்களுக்குத் திரு ராம்ப்ரஸாத் என்ற நண்பரை 9787548663 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

முதலில் வருவதாகச் சொல்லிவிட்டுக் கடைசி நேரத்தில் வர இயலாது என்று சொல்வதைக் கனிவு கூர்ந்து தவிர்க்கவும். தங்களின் பயணம் அவ்வளவு உறுதி செய்ய இயலாது எனக் கருதும் அன்பர்கள் பிரிதொரு சந்தர்ப்பத்தில் வரலாம்.

Jan 25, 2011

வால்பாறைக்கு வாங்க

சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் பதிவர்களை வனப் பகுதிக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். பிப்ரவரி மாதம் ஒரு வார இறுதியில் கோவையில் இருந்து அதிகாலை ஒரு வாடகை வாகனத்தில் கிளம்பி இரண்டு நாட்கள் குடும்பச் சுற்றுலாவாக வால்பாறைக்குச் செல்லலாம் எனத் திட்டம். நானும் லதாளும் வருகிறோம்.

தங்குமிடம் மற்றும் வனப் பகுதிகளுக்குள் செல்ல அனுமதி பெறுவது ஆகியன எனது பொறுப்பு. விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக எனக்குப் பின்னூட்டத்திலோ அல்லது மின்மடலிலோ தெரிவியுங்கள்.