May 28, 2008

அசைவம் சாப்பிடும் தாவரம் -நெபந்தஸ்ரேஞ்சர் மாமா வார இறுதியில் கோயமுத்தூருக்கு வந்து விட்டால் அவர் வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் சுட்டிகளுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம்தான்!


“ரேஞ்சர் அங்கிள்! ஃபாரஸ்ட் பத்தி ஏதாவது சொல்லுங்க அங்கிள்!” என்று நச்சரித்து விடுவார்கள். அவரும் சளைக்காமல் சுவையாகப் பல செய்திகளைச் சொல்லுவார்.


ரேஞ்சர் மாமா மொட்டை மாடியில் ஹாயாக நாற்காலி ஒன்றில் உட்கார்ந்திருந்தார். அவர் முன்னால் பத்துப் பதினைந்து வாண்டுகள் தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தனர்.


“என்ன குட்டிகளா? மனுஷர்களில் சைவம் அசைவம்னு உண்டு! அது உங்களுக்குத் தெரியும். ஆனா தாவரங்களிலே அசைவம் உண்டு தெரியுமா?”


“மாமா ரீல் விடாதீங்க. தாவரங்கள் தயாரிக்கிற உணவுக்குப் பேரு ஸ்டார்ச். அதுவும் சூரிய ஒளி, கார்பன்டை-ஆக்ஸைடு, தண்ணீர் இவைகளை வைச்சுத் தயாரிக்குது. சும்மா பீலா உடாதீங்க!” என்றான் ஜோசப்.


அவனது தலையில் நறுக்கென்று குட்டினாள் மெஹருன்னிசா. “அங்கிள்! நீங்க சொல்லுங்க! அசைவம் சாப்பிடுற தாவரங்களைப் பத்தி.” என்று ஆர்வமாகக் கேட்டாள்.


“ட்ரொசீரா, சரசீனியா, முசியூலா, நெபெந்தஸ் இந்த மாதிரி நெறைய செடி இனங்கள் பூச்சிகளை உணவாகக் கொண்டு வாழுதுங்க! அதுவும் இந்த நெபந்தஸ் ரொம்ப விசித்திரமான செடி. சுமார் 30 இனங்களும் 80 வகைகளும் இதிலே இருக்கு. இதோட இலைப் பரப்பு ஒரு குவளை மாதிரி உருவத்தில் மாறுபாடு அடைந்திருக்கும். சில வகைகளில் அந்தக் குவளையோட வெளிப் பக்கத்தில் சூப்பரா விதம் விதமாப் பெயிண்ட் அடிச்ச மாதிரி அலங்காரமா இருக்கும். அந்தக் குவளையோட வாயை மூடுற மாதிரி ஒரு மூடியும் இருக்கும்” என்றவரை இடைமறித்தான் மாதப்பன்.


“எதுக்கு அங்கிள் அந்த மாதிரி அலங்காரமெல்லாம் இருக்கு?”


“பூச்சிகளைக் கவருவதற்காக இயற்கையே அந்த மாதிரி வசதி பாண்ணிக் கொடுத்திருக்கு. அது மட்டுமில்லை. குவளைகள் ஜம்முனு வாசனையாகவெல்லாம் கூட இருக்கும். குவளையோட மூடி திறந்தபடி இருக்கும். வண்டு மாதிரி சின்னப் பூச்சிங்க இந்தச் செடியோட அழகில் ஈர்க்கப்பட்டு குவளைக்குள் நுழைந்ததும் மூடி சாத்திக்கும்! உள்ளே உரோமம் மாதிரி மெல்லிய இழைகள் நிறைய இருக்கும். உள்ளாற போன பூச்சி திரும்ப வெளியே வர முடியாதபடி அந்தக் கீழ் நோக்கி அமைஞ்சிருக்கும் இழைகள் ஒரு வால்வு மாதிரி தடுத்திடும்.”
“ஏன் அங்கிள்! ஒன் வே டிராஃபிக் மாதிரியா?” என்றான் கிரிதர்.


“அதே மாதிரிதான்பா! அத்தோட உள்ளே வழு வழுப்பா ஒரு திரவம் வேற சுரந்து பூச்சியைக் குவளைக்குள்ளேயே சமாதி ஆக்கிரும்.”


“அப்புறம்?” என்றான் பாலாஜி. “அப்புறம் என்ன! நம்ம வயத்துக்குள் உணவு போன பிறகு சுரப்பது மாதிரியே குவளைக்குள்ளேயும் சில ஜீரண என்சைம்கள் சுரக்கும். பூச்சியைப் பூரணமா உறிஞ்சிரும். அப்புறம் பூச்சி வெறும் சருகு மாதிரி ஆயிடும்.
“அந்த வேஸ்ட் சமாச்சாரங்களை எப்படி அங்கிள் செடி வெளியே துப்பும்?” என்று கேட்டான் சுதிர்.


“துப்பவெல்லாம் செய்யாது. குவளைக்குள்ளேயே குப்பை மாதிரி இருந்திடும். அப்புறம் எல்லா இலைகளையும் போலவே இந்த குவ¨ளையும் காய்ஞ்சு கீழே விழுந்திடும். அப்படி உதிர்ந்த இலைகளை எடுத்துப் பிரிச்சுப் பார்த்தா உள்ளே செத்துப்போன பூச்சிகள் சருகு மாதிரிக் கிடப்பதைப் பாக்கலாம்”


“மாமா! நெபெந்தெஸ் எல்லாப் பூச்சியையும் பிடிச்சுடுமா?” என்றான் கதிர்வேல்.


“இது ரொம்ப நல்ல கேள்வி” என்று சிலாகித்த ரேஞ்சர் மாமா “ சில வகை செடிகளுக்குச் சில பூச்சிகளை ரொம்பப் பிடிக்கும். அதை மட்டும் ‘லபக்'னு பிடிச்சிடும். அதே சமயம் வேற சில பூச்சிகளை ஒண்ணுமே பண்ணாது. உதாரணமா சில வகை ஈக்கள். கொசுக்கள் தரை நண்டுகள் இதெல்லாம் ஜாலியாக் குவளைக்குள்ளேயே போய் முட்டை கூட வெச்சிட்டு ஹாயா வெளியே வந்திடும். சில வகை எறும்புகள் குவளைக்குள்ளேயே புற்று கூடக் கட்டிகிட்டு கும்பம் நடத்திட்டு இருக்கும்.”


“இந்த மாதிரி அசைவச் செடிகள் எந்த மாதிரியான பூமிகளில் வளரும் மாமா?” என்றாள் மெஹருன்னிஸா.


நைட்ரஜன் சத்துக் கம்மியான பூமியில் வளரும் இந்த வகைச் செடிகள் பூச்சி உடலில் இருக்கிற புரோட்டீன் மூலமா தேவையான நைட்ரஜன் சத்தை உறிஞ்சிக்கும்!


வட இந்தியாவிலே காஸிரங்கா வனப் பகுதியிலே இந்த அரிய வகை நெபந்தெஸ் செடிகளைப் பாதுகாப்பதுக்காகவே தனிப் பகுதி இருக்கு! தமிழ்நாட்டிலே கூட ஏற்காட்டில் பொட்டானிக்கல் சர்வே ஆஃப் இந்தியா நிறுவனத்திலே சில செடிகளைக் கம்பி வேலி போட்டுப் பாதுகாக்கிறாங்க!


நெபந்தெஸ் வகைச் செடிகள் பாக்கிறதுக்கும் அழகா இருப்பாதாலும், சின்னச் சின்னப் பூச்சிகளைப் பிடித்து விடுவதாலும் அரிய வகைத்தாவராமாக இருப்பதாலும் மேலை நாடுகளில் இச் செடி வியாபாரம் கொடி கட்டிப் பறக்குது.”


“இதை செயற்கை முறையில் எப்படி மாமா இனப் பெருக்கம் பண்ணூறாங்க?” என்றான்” கதிர்வேல்.


“விதை மூலமாகவும், கட்டிங்குகள் மூலமாகவும் இனப் பெருக்கம் பண்றாங்க. இந்தச் செடியோட கொட்டை முப்பட்டை வடிவத்திலே ஒரு கேப்ஸ்யூல் போல இருக்கும். உள்ளாற பத்திலிருந்து அறுபது விதை வரை இருக்கும். ஒவ்வொரு விதைக்கும் இரண்டு இறக்கை இருக்கும். அதன் மூலமா காத்திலே பறந்து பரவும். விதைச்சதுக்கப்புறம் முளைக்க 2 மாசம் ஆவும். குவளைகள் உருவாக 2 வருஷம் ஆவும். ஆனா கட்டிங் மூலமா வளர்த்தால் 2 மாசத்துக்குள் வேர் பிடிச்சு 6 மாசத்திலே குவளைகள் ரெடியாய்டும். திசு வளர்ப்பு முறையில் கூட அதிக அளவில் இதை உற்பத்தி செய்யலாம்.”


குட்டிப் பையன் சுந்தரம், மாமா! இதுவரைக்கும் இந்தச் செடி கிட்ட மாட்டினதுலேயே பெரிய பூச்சி எது? என்று கேட்டான்.


“ஒரு சுண்டெலிதான் இது வரைக்கும் நெபெந்தஸ் கிட்ட சிக்கினதிலேயே பெரிய ஐட்டம்” என்றவர்,


“டேய் பையா! காட்டுக்குள்ளே போகும்போது மூச்சா வந்திடுச்சுனா ஜாக்கிரதையாப் போகணும்! பக்கத்திலே நெபெந்தஸ் செடி இருந்துச்சுனா வம்பாயிடும் தெரிஞ்சுக்கோ!” என்றார். ‘கொல்'லென்று சிரித்த படி கலைந்தோடினர் சுட்டிகள்.

3 comments:

லக்கிலுக் said...

நெபந்தஸின் வடிவம் தான் ஏடாகூடமாக இருக்கிறது :-)

Anonymous said...

Hi,

Very Good article. Forest Ranger with a sense of humor. whoa!

josh

செல்வமுரளி said...

அய்யா!

நீங்கள் இதைத்தான் சொன்னீர்களா?

கொஞ்சம் எச்சரிக்கையாத்தான் இருக்கணும் உங்கட்டட.....

நன்றி!
என்றும் அன்புடன்
செல்வ.முரளி