Jun 25, 2008

கடைசிக் குறிப்பு

“புரபசர் நரேந்திரன்! நீங்க பூரணமா குணமாயிட்டீங்க. நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆயிடலாம்” என்றபடி கை குலுக்கினார் டாக்டர் மாதப்பன். “ஆனா அதுக்கு முன்னாடி நீங்க சந்திக்க வேண்டிய ஒரு முக்கியமான பேஷண்ட் பக்கத்து அறையில் இருக்கார். நீங்க அவசியம் சந்திக்கணும்” என்று பக்கத்து அறைக்குப் புரபசர் நரேந்திரனை அழைத்துச் சென்றார்.

கோவையின் மிகப் பெரிய தனியார் மருத்துவ மனை அது. பரபரப்பான சினிமாத் தியேட்டர் காம்ப்ளெக்ஸும் பெரிய பெரிய ஹோட்டல்களும் ஒரு பக்கம் இருக்க, மிக அமைதியான ரேஸ் கோர்ஸ் சாலை மறு புறம் அமைந்த இடத்தில் இருந்தது அந்த மருத்துவ மனை. அந்த மருத்துவ மனையின் பணக்காரத் தனத்துக்குத் துளியும் சம்பந்தமில்லாமல் இருந்தது பக்கத்து அறைக்காரரின் தோற்றம்.


அவருக்குச் சுமார் அறுபது வயதிருக்கும். சாயம் போன ஆனால் சுத்தமான காவி வேட்டி, காவிச் சட்டை உடுத்தியிருந்தார். அதே நிறத்தில் மேல் துண்டு. நெற்றியில் விபூதி குங்குமம். வழுக்கை விழாத தலையில் அடர்ந்த நரைமுடி. நீண்ட தாடி.


“இவர் பேரு மணவாளச் சித்தர். இவர் கிட்ட ஏன் உங்களைக் கூட்டி வந்தேன்னு யோசிக்கிறீங்களா? உங்க ரெண்டு பேருக்கும் சில விசித்திர ஒற்றுமைகள் இருக்கு. இவரும் உங்கள மாதிரி ஒரு சாலை விபத்தில அடிபட்டு மயிரிழையில் உயிர் பிழைச்சவர். அது மட்டுமில்லை. இவர் பிளட் குரூப்பும் உங்களது மாதிரியே ரொம்ப அபூர்வமானது. சீரம் திக்னஸ் கூட ரொம்ப விசித்திரமா அலாதியா ஒரே மாதிரி இருந்தது. அதான் உங்களை இவர் கிட்ட அறிமுகப் படுத்தணும்னு தோணிச்சு. நீங்க பேசிக்கிட்டு இருங்க. நான் ரவுண்ட்ஸ் போயிட்டு வந்திடறேன்” என்றவாறு அறையை விட்டு வெளியேறினார் டாக்டர்.


புரபசர் நரேந்திரன் கைகூப்பி வணங்கி விட்டுத் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். “எனக்குச் சொந்த ஊர் ஊத்துக்குளிங்க. ஆனாப் படிச்சதெல்லாம் மெட்ராஸுலதான். அப்புறம் மேற்படிப்புக்காக லண்டன் போயி பி.எச்டி. முடிச்சு டாக்டர் பட்டம் வாங்கினேன். கொஞ்ச நாள் அங்கேயே புரபசரா வேலை பார்த்தேன். பூர்விகச் சொத்து நிறைய இருக்கு. வேலைக்குப் போக வேண்டிய அவசியமும் இல்ல. எனக்கு அதுல ஆர்வமும் இல்ல. அதனால வேலைய விட்டுட்டு கோயமுத்தூர்லேயே துடியலூர்ப் பக்கம் செட்டிலாய்¢ட்டேன். ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பத்திப் பதினஞ்சு வருஷமா ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கேன். போன வாரம் கார் விபத்தாகி இங்க அட்மிட் ஆயிட்டேன்” என்றார்.


மணவாளச் சித்தர் புரபசர் நரேந்திரனையே உற்றுப் பார்த்தார். மேல் துண்டை எடுத்து அந்த ஏ.ஸி அறையிலும் சட்டென்று வியர்த்துப் போன தன் முகத்தைத் துடைத்துக் கொண்டார். அவரது உடல் லேசாக நடுங்கியது. வறண்டு போன உதடுகளை நாவால் ஈரப் படுத்திக் கொண்டு மெலிதான குரலில் “உங்க ஆராய்ச்சி உலோகங்கள் சம்பந்தப் பட்டதா?” என்றார்.


புரபசர் நரேந்திரனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அவரது ஆராய்ச்சி பற்றி அவர் யாரிடமும் இதுவரை சொன்ன தில்லை. ஆராய்ச்சி செய்ய உலகத்தில் எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது மிகச் சரியாக எப்படித் தான் செய்யும் ஆராய்ச்சி பற்றி இவரால் குறிப்பிட்டுக் கேட்க முடிந்தது என்ற குழப்பம் மேலோங்கியது.


படபடப்புடன் “ஆமாங்க ஐயா! எப்படிக் கரெக்டாக் கேட்டீங்க! என்னால நம்பவே முடியலை. நான் யார் கிட்டேயும் அதைப் பத்தி எப்போதும் பேசியதுகூடக் கிடையாதே” என்றார்.


மணவாளச் சித்தர் பதிலேதும் சொல்லாமல் அண்ணாந்து மேலே பார்த்தவாறு இருந்தார். அவரது உதடுகள் மட்டும் மெல்ல ஏதோ முணு முணுத்தன.

புரபசர் நரேந்திரனால் ஆர்வத்தைக் கட்டுப் படுத்த முடியவில்லை. “ஐயா சித்தரே! ப்ளீஸ்! எப்படி யூகிச்சீங்கன்னு தயவு செஞ்சு சொல்லுங்கையா.” என்று ஏறக் குறைய அலறுவது போலக் கேட்டார்.
சித்தரின் குரல் தெளிவாக இப்போது வெளி வந்தது.


அஞ்ஞானி பல பேர்கள் அடையாத வாத வித்தை விஞ்ஞானி துணையுடனே விரைவாகக் கைகூடும்”


“சித்தரே நீங்க சொல்றது ஒண்ணுமே புரியலிங்கய்யா. தயவு செய்து விளக்கமாச் சொல்லுங்க” என்றார் புரபசர் நரேந்திரன்.


“சொல்றேன்! சொல்றேன்! அதுக்கு முன்னாடி என்னைப் பத்திக் கொஞ்சம் சொன்னாத்தான் உங்கள் கேள்விக்கும் பதில் கிடைக்கும்” என்று தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார் சித்தர்.


“என்னைப் பார்த்து எதோ சாமியார்னு நினச்சிடாதீங்க. முப்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி சர்வீஸ் கமிக்ஷன் பரிட்சை பாஸ் பண்ணி ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்டில ரேஞ்ச் ஆபீசரா செலக்ட் ஆகி முதல் போஸ்டிங்கில் கொல்லி மலையில காட்டிலாகா அதிகாரியா வேலைக்குச் சேர்ந்தேன். அப்பக் காட்டுக்குள்ளே சுத்தும்போது எனக்கு ஒரு மகானுடைய அறிமுகம் கிடைச்சுது. அவர்மேல உள்ள ஈடுபாட்டில வேலையை ராஜினாமா பண்ணிட்டு அவரைக் குருநாதரா ஏத்துக்கிட்டு அவர் கூடவே இருந்துட்டேன். அவருக்குத் தெரியாத மூலிகை ரகசியங்களே கிடையாது. அந்தப் பகுதியில் இருக்கிற பாவப் பட்ட மலைவாசி ஜனங்களுக்கு இலவசமா மூலிகை வைத்தியம் செய்வார். ஆனா அதோட அவர் இன்னொரு விஷயத்திலேயும் தீவிரமா இருந்தார். எதேதோ மூலிகைகளையும் சில வினோதமான வஸ்துக்களையும் கலந்து கொதிக்க வெச்சிட்டெ இருப்பார். பழைய ஓலைச் சுவடிகளை வச்சுக்கிட்டு அதைப் பார்த்துப் பார்த்து தினந்தோறும் தனக்குத் தானே பேசிக்கிட்டு இருப்பார். என் மேல பூரண நம்பிக்கை வந்ததும் ஒரு நாள் அவராகவே என்னைக் கூப்பிட்டு, ‘நான் மேற்கொண்ட முயற்சி என் காலத்திலே ஜெயிக்காது மணவாளா! என்னோட அந்திம நேரம் நெருங்குறது எனக்குத் தெரியுது. அதனால உங்கிட்ட இதுவரை நான் செஞ்ச ரகசிய ஆராய்ச்சிக் குறிப்புகளைச் சொல்றேன். நான் விட்ட இடத்திலுருந்து நீ அதைத் தொடரணும்'னார். ஒரு விஷயம் சொல்ல மறந்திட்டேனே! அவர் தயாரிக்கிற கலவைகளைச் சின்னச் சின்ன இரும்புப் பொம்மைகள் மேல தடவித் தடவிப் பார்ப்பார். ஆச்சரியமான விஷயம் என்னன்னா அந்த இரும்புப் பொம்மைகள சிலது லேசா நிறம் மாறுவதைப் பார்த்திருக்கேன்”.


இந்தச் சமயத்தில் புரபசர் நரேந்திரன் தன்னை மீறி “ஆல்கெமி” என்று வாய் விட்டுக் கூவி விட்டார்.
மணவாளச் சித்தர் லேசாகச் சிரித்தார். “ஆமாங்க! ஆல்கெமின்னு நீங்க சொன்ன அதே ரசவாத வித்தையில ஜெயிக்கணும்கிறதுதான் அவரோட லட்சியம். எப்படியாவது இரும்பைத் தங்கமா மாத்தியே தீரணும்னுதான் அவ்வளவு பாடு பட்டார். அவரோட ஆராய்ச்சியிலே நூத்தியெட்டு நிலைகள் தாண்டி வந்திட்டதாச் சொல்லி அதையெல்லாம் ஓலைச் சுவடிகளைப் படிச்சு அர்த்தங்களைக் கஷ்டப் பட்டுக் கண்டு பிடிச்சுச் செய்யுள் மாதிரி எனக்குச் சின்னச் சின்னக் குறிப்புகளாக் கொடுத்தார். இன்னும் நாப்பத்தெட்டு நிலைகள் இருக்கும்னும் சொல்லி அவரது ஆராய்ச்சியை நான் தொடரணும்னு கட்டளை போட்டுட்டு ஜீவ சமாதியாயிட்டார். கடைசிக் குறிப்பை மட்டும் ஏனோ அவர் தரவேயில்லை அவர் கத்துக் கொடுத்த வைத்தியத்தையும் பார்த்துகிட்டே ரசவாத வித்தை முயற்சியையும் தொடர்ந்தேன். இத்தனை வருஷமா நானும் எவ்வளவோ போராடி அவர் விட்டதில் இருந்து மேற்கொண்டு நாப்பத்தாறு நிலைகளை முடிச்சிட்டேன். ஒரு சேர்மானப் பொருளுக்காகக் கோயமுத்தூர் வந்தப்ப ரோட்டிலே ஒரு பஸ்காரன் மோதிட்டான். அடிபட்டுக் கிடந்த என்னை யாரோ பேர் சொல்ல விரும்பாத நல்ல மனசுக்காரர் என்னோட தோற்றத்தைப் பார்த்து சாமியார்னு நினைச்சு சிகிச்சைச் செலவை முழுசும் கட்டி அட்மிட் பண்ணிட்டுப் போயிட்டாரு. இன்னைக்கு நப்பத்தேழாவது நிலை பத்தின வாசகமும் பலிதமாயிருச்சு” என்றவர் மறுபடியும்,

“அஞ்ஞானி பல பேர்கள் அடையாத வாத வித்தை விஞ்ஞானி துணையுடனே விரைவாகக் கைகூடும்”


என்று வாய்விட்டு உரக்கச் சொன்னார்.


“இன்னும் ஒரே ஒரு நிலைதான் பாக்கி இருக்கு! அதுவும் கைகூடுகிற காலம் நெருங்கி வந்திருச்சுன்னு நினைக்கிறேன்” என்றார்.


புரபசர் நரேந்திரன் தாங்க முடியாத ஆச்சரியத்துடன், “ஸோ வாதவித்தை ன்னு நீங்க சொன்னது ‘ஆல்கெமி'! ஐ மீன் ரசவாதம்! அதாவது இரும்பைத் தங்கமாக்கறது! ஒண்டர்ஃபுல்! ஐயா சித்தரே! நானும் அதே ஆராய்ச்சியிலதான் ஈடுபட்டிருக்கேன். நாம ரெண்டு பேரும் சந்திச்சது ரொம்ப ஆச்சரியமா இருக்கு. என்னுடைய ஆராய்ச்சியும் கிட்டத்தட்ட முடியற தருவாயில இருக்கு. இன்னும் ஒரே ஒரு கெமிக்கல் சேர்த்தாப் போதும் அந்த சேர்க்கைப் பொருளைக் கண்டு பிடிக்கிறதுக்குத்தான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.” என்றார்.


மணவாளச் சித்தர் கொஞ்ச நேரம் ஆழ்ந்து யோசித்தார்.
“எனக்கும் இன்னும் ஒரு நிலைதான் பாக்கி இருக்கு. ஏன் நாம ரெண்டு பேரும் ஒரே இடத்தில் அதாவது கொல்லி மலையிலேயே நம்ம ஆராய்ச்சியைத் தொடரக் கூடாது? நிச்சயம் உங்க துணயோடதான் அது கைகூடும்னு உறுதியா நம்புறேன்” என்றார்.


“எனக்கும் அப்படித்தான் தோணுது. நாளை மதியம் என்னுடைய சோதனைச் சாலையிலிருந்து தேவையான பொருட்களை மட்டும் எடுத்திட்டுப் புறப்படலாம்” என்ற புரபசர் நரேந்திரன் சித்தரிடம் விடை பெற்றுத் தன்னுடைய அறைக்குப் புறப்பட்டார்.

மறு நாள் பிற்பகல் சித்தரும் புரபசர் நரேந்திரனும் திட்டப்படி கொல்லி மலை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்தனர். புரபசரின் இரட்டை ஏ.சி. பொருத்தப்பட்ட குவாலிஸ் கார் தார்ச் சாலையில் வழுக்கிக் கொண்டு பறந்தது. அவரே ஓட்டி வந்தார்.


ராசிபுரம் தாண்டி கோம்பைக்காடுப் பிரிவில் மலைப் பாதையில் நுழையும் வரை கண்களை மூடி வந்த சித்தர், “உங்க ஆராய்ச்சி பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்” என்றார்.


“கூடியவரை புரியற மாதிரி சுருக்கமாச் சொல்ல முயற்சிக்கிறேன். எல்லா உலோகங்களுடைய அணுக்களிலும் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் என்று அணுவைக் காட்டிலும் நுணுக்கமான சங்கதிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கு. இரும்பின் மூலக்கூறுகளுடைய அந்த அணு உள் கட்டமைப்பைத் தங்கத்தின் அமைப்பா மாத்துறதுதான் அடிப்படை. அதுக்காகப் பல ரசாயனக் கலவைகளையும் பல விதங்களிலும் மாற்றி மாற்றிக் கலந்து நிறையச் சோதனைகள் செய்து கிட்டத் தட்டத் தங்கத்தை நெருங்கிட்டேன்” என்றவர், “ஆமா! உங்க குருநாதர் ஏதோ நிலைகள்ன்னு சொன்னாரே! நீங்களும் என்னை மாதிரியே சுருக்கமாச் சொல்லுங்க! கேட்போம்” என்றார் புரபசர்.


அவரையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்த சித்தர், “அதை அவ்வளவு சுலபமாச் சொல்லிவிட முடியாது. பல சேர்க்கை வஸ்துக்களையும் குறிப்பிட்ட எடையில் கலந்து இரும்பிலே பூசிப் பூசிப் பாடம் பண்ணணும். மாதிரிக்கு வேணும்னா ஒரு நிலையைச் சொல்றேன். ஆனா விளக்கமெல்லாம் சொல்ல உத்தரவில்லை” என்றவர்,


‘மணமாகாக் கன்னியின் மதன நீர் ஒரு மல்லியெடை பிணமாகாக் கருநாகப் பல்லோ வொரு பிடங்கினெடை குணமான சிறுகுறிஞ்சி குன்றாத விரற் பிறண்டை மணங்கழும் மாம்பூ அளவோடு மையாக அரைத்துவிடு'

இது ஒரு நிலையின் வாசகம். இது மாதிரிப் பல நிலைகள் தாண்டிக் கடைசிக்கும் முந்தைய வரை எல்லாம் பலிதமாயிடிச்சு. இன்னும் ஒரே ஒரு நிலைதான் பாக்கி! அதைக் கண்டு பிடிக்கக் குருநாதர்தான் திருவுளம் செய்ய வேண்டும்” என்றார்.


புரபசர் தலையைச் சிலுப்பிக் கொண்டார். “சுத்தமா ஒண்ணும் புரியலைங்க! புரியவும் வேண்டாம்! ஒண்ணா வேலை செய்வோம். எப்படியோ ஜெயிச்சாச் சரி!” என்றார் சிரித்துக் கொண்டே.


மலைப் பாதையில் வளைந்து வளைந்து கார் மேலேறியது. சாலையின் இரு மருங்கும் கிரிவியா ரோபஸ்டா மரங்களின் மஞ்சள் நிறப் பூக்கள் வர்ண ஜாலம் காட்டின. செம்மேடு தாண்டிச் சித்தர் காட்டிய வழியில் பயணித்து ஒரு மண் சாலையில் கிளை பிரிந்து ஆள் அரவமற்ற வனாந்திரத்தில் மேலும் ஒரு மணி நேரம் பயணம் செய்த பிறகு ஆதிவாசிகளின் குடியிருப்பு ஒன்றின் அருகே சென்று சாலை முடிந்தது.


“இந்த இடத்துக்குப் பெயர் குழிவளவு. இங்கே இருக்கிற மலைவாசிகளுக்கு அரசாங்கமே குடியிருக்க இடம் கொடுத்திருக்கு. செட்டில்மென்ட் ஏரியான்னு பேர். இந்த ஆதிவாசிகள் எனக்காகக் கட்டிக் கொடுத்த வீட்டிலேயேதான் என்னுடைய ஆராய்ச்சியும் நடக்குது. வாங்க! போகலாம்” என அழைத்துச் சென்றார்.


புரபசர் நரேந்திரன் தன்னுடைய பொருட்களை மிகக் கவனமாக எடுத்துக் கொண்டு சித்தரின் வீட்டுக்குள் நுழைந்தார். ஓலையால் வேயப் பட்டுப் பெரிய ஹால் போலிருந்தது சித்தரின் குடியிருப்பு. வீடு முழுவதும் காய்ந்து போன பச்சிலைகள் குவியல் குவியலாகக் கிடந்தன. நகைக் கடைகளில் எடை போட உதவும் காற்றுப் புகாத எலக்ட்ரானிக் தராசு ஒரு ஓரமாக இருந்தது. இறைச்சிக் கடைகளில் அடிக்கும் ஒரு வித மாமிச வாடை லேசாகச் சுழன்று கொண்டிருந்தது.


வீட்டுக்கு வெளியே இருபது அடி தூரம் தள்ளி மிகப் பெரிய பள்ளத் தாக்கு. அங்கே அறுநூறடிக்கும் கீழே அதல பாதாளத்தில் ஆகாச கங்கை என்ற பெயர் கொண்ட நதி ஸ்ஸ்ஸ்ஸ் என்ற சப்தத்துடன் கரை புரண்டு பிரவகித்து ஓடிக் கொண்டிருந்தது.

ஒரு மாத காலம் பறந்தது. பெரும்பாலும் சமைக்காத காய் கறிகள் தான் இருவருக்கும் ஆகாரம். இரவில் காய்ச்சாத ஆட்டுப் பாலை அரப்புளி என்ற மலைவாசி இளைஞன் கொண்டு வந்து தருவான். புரபசர் நரேந்திரன் ஓரளவு அந்த வகை உணவுகளுக்குத் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டு விட்டார். சித்தரின் இரும்புப் பொம்மைகளும் புரபசரின் இரும்புத் துண்டுகளும் தனித் தனியே அடுக்கி வைக்கப்பட்டுப் பல விதப் பரிசோதனைகளுக்கும் ஆட்படுத்தப் பட்டிருந்தன. சித்தர் எப்போதாவது மட்டுமே பேச்சுக் கொடுப்பார்.


ஒருநாள் புரபசர் நரேந்திரன் மிகக் கவனமாக ஒரு கண்ணாடிச் சீசாவில் இருந்து துளித் துளியாக ஒரு திரவத்தை இன்னொரு குடுவையில் இட்டுக் கலக்கிக் கொண்டிருந்தார்.


பீங்கான் பாத்திரம் ஒன்றில் சில பசுந் தழைகளை அரைத்துக் கொண்டிருந்த மணவாளச் சித்தர் லேசாகச் சிரித்த படியே, “என்னங்கய்யா அது? அவ்வளவு கவனமாக் கலக்குறீங்க?” என்றார்.


பார்வையைத் திருப்பாமலே, “இது டி.என்.டி! அதாவது ட்ரை நைட்ரோ டொலுவீன்! பயங்கரமான வெடிபொருள்! அதைத்தான் இப்போ ட்ரை பண்ணிகிட்டிருக்கேன்” என்றார் நரேந்திரன்.


அடுத்த நொடி! மிகப் பலமான ஓசையுடன் அந்தக் கலவை வெடித்துச் சிதறியது. படுகாயப்பட்ட இருவரின் உடம்பிலிருந்தும் பீறிட்ட ரத்தம் ஒரே குழம்பாகக் கலந்து, ஒடிச் சித்தரின் இரும்புப் பொம்மைகள் மீதும் புரபசரின்இரும்புத் துண்டுகள் மீதும் பீய்ச்சி அடித்த அதே வினாடி அவை தகத் தகாயமாய்ப் பளீரிட்டுச் சொக்கத் தங்கமாய் மாறி மின்னின. அந்தக் காட்சிதான் அவர்கள் இருவரும் கடைசியாகப் பார்த்த காட்சி!


மறுபடியும் பெருத்த ஓசையுடன் வெடித்துச் சிதறியது அந்த ஆராய்ச்சி சாலை. அங்கிருந்த சகலமான பொருட்களுடன் இருவரின் சடலங்களும் ஆகாச கங்கை பாயும் அதல பாதாளத்தில் விசிறி எறியப் பட்டு மூழ்கி மறைந்தன.


சித்தரின் குருநாதர் சொல்லாமல் விட்டு விட்ட கடைசிச் சுவடி குருநாதரின் சமாதிக்குள்ளேயே எலும்பாய் மாறிய அவரது மூடிய கையில் கிடந்தது.


“ஈடுபட்ட இரு பேரின் செங்குருதி ஒன்றாகிப்

பாடுபட்ட பலனது பலிதமாகும் வேளையிலே

கூடுவிட்டு ஆவிகள் போய்க் குணவான்கள் உடலங்கள் மேடுவிட்டுப் பள்ளம்சேர் வெள்ளநீர் கலந்திடுமே”

-------

23 comments:

Anonymous said...

பாடல்களைப் பார்க்கும்போது உங்களை லதானந்த சித்தர் என்றுதான் சொல்ல வேண்டும்.

Athisha said...

அண்ணா இந்த கதையை முன்பே படித்துருக்கிறேன் . அந்த கதை உங்களுடையதா??

சூப்பருங்கண்ணா..
(அந்த கதைய மொத தடவ படிச்சதுமே மனசுக்குள்ள நெனச்சதுங்கண்ணா இந்த சூப்பர் )

இங்க அத பதிவா போட்டதுக்கு ரொம்ப நன்றிங்கணா

puduvaisiva said...

“ஈடுபட்ட இரு பேரின் செங்குருதி ஒன்றாகிப்


பாடுபட்ட பலனது பலிதமாகும் வேளையிலே


கூடுவிட்டு ஆவிகள் போய்க் குணவான்கள் உடலங்கள் மேடுவிட்டுப் பள்ளம்சேர் வெள்ளநீர் கலந்திடுமே”

:-))

very nice short Story Lathanath uncle.

puduvai siva

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

அருமை!

வெண்பூ said...

ஏற்கனவே நான் ரசித்து (நீங்கள் வலை மூலம் அறிமுகமாகும் முன்னரே) வியந்த கதைகளில் இதுவும் ஒன்று. நல்ல தீம் மற்றும் நடை.

-- I still see anonymous option during commenting -- :)))

VIKNESHWARAN ADAKKALAM said...

அந்தச் சித்தர் போலியானவராக இருக்க வேண்டும்... கடைசியில் விஞ்ஞானியை ஏதாகினும் செய்துவிடுவார் என்றேண்ணிதான் படித்தேன்... மறுபட்ட முடிவு... சிறப்பாக இருந்தது... இக்கதையை வலையில் கொடுத்ததிற்கு நன்றி...

கயல்விழி said...

நானும் இந்த கதையை படித்தேன். ஆனால் இப்போது திரும்ப படிக்கும் போதும் அதே சுவாரஸ்யம். இதுவரை நான் படித்த உங்க கதை எல்லாவற்றிலுமே இது தான் பெஸ்ட். அந்த ஓலைச்சுவடி செய்யுள் எல்லாம் நீங்களே எழுதியதா?

ambi said...

அருமையான கதையோட்டம். மர்ம தேசத்துல வர மாதிரி பாடல்கள் மிக அருமை. ஒரு அரை மணி நேர தொடரா கூட எடுக்கலாம். காப்பி ரைட் போட்டு வெச்சுகுங்க.

//I still see anonymous option during commenting //

இப்படியா அங்கிளை ஏமாத்தறது? :p

ambi said...

அடடா ஏற்கனவே இது ஆவில வந்ருக்கா? சூப்பருங்கோ. :))

சிறில் அலெக்ஸ் said...

நல்லாயிருக்கு கதை. இரத்தம் பற்றி டாக்டர் சொல்லும் குறிப்பை வைத்து யூகிக்க முடிந்தது. பாடல்கள் நம்பககத் தன்மையை அதிகரித்தது.

http://jeyamohan.in/?p=58

இது பார்த்திருப்பீங்கண்ணு நினைக்கிறேன்.

லதானந்த் said...

கோவாலு!
எனக்கு இந்த மாசப் பட்டம் இதுவா?

அதிஷா!
நன்றி! அது சரி உங்க பெயர்க் காரணம் என்னவோ?

சிவா, வெண்பூ, விக்னேஷ்வரன், மற்றும் புது வரவு ரவிஷங்கர்
நன்றி!

கயல்!
பாராட்டுக்கு நன்றி!
கதையில் உள்ள அனைத்துமே நான் எழுதியவைதான். பின்ன? கலிஃபோர்னியா டார்ம் மேம் எழுதிக் கொடுத்ததுன்னு நினைசீங்களா?

அம்பி!
விரைவில் எனது சிறுகதைகளை நீங்கள் சின்னத்திரையில் பார்க்கலாம். ஒரு ப்ராஜக்ட் இருக்கு!

சிறில்!
நீங்கள் மிக நுட்பமாகக் கதையை வாசிப்பது புரிகிறது. அந்தக் கதையின் மர்ம முடிச்சு தொடர்பாக ஆரம்பத்திலேயே ஒரு paassing reference போல எழுதியிருப்பேன். Just as a passing cloud. இது சிறுகதையில் ஓர் யுக்தி. பொதுவாகக் கதை முழுக்கக்கப் படித்தபின்னரே 'அட! இந்த வரிக்கு இதுதான் அர்த்தமா?' என்று பலரும் வியப்பர். ஆனால் அதை நீங்கள் முதலிலேயே smell பண்ணியிருக்கிறீர்களென்றால். i really feel proud to have such sharp readers. Qualities for a critic! (பாத்திங்களா? இங்கிலீஷ் வந்துச்சு)

அது சரி!
ரசவாதம் தொடர்பாக ஜெயமோஹன் கதையைப் படித்தேன். (அதற்கு முன்னரே வந்த கதை இது). அவரிடம் பேசும்போது கூட A strange coincidence" என்று பேசிக் கொண்டோம்.

சுஜாதா கூட எல்டராடோ என்று ரசவாதம் தொடர்பாகக் கதை எழுதியிருக்கிறார்என்று நினைக்கிறேன்

Unknown said...

சுஜாதா கூட எல்டராடோ என்று ரசவாதம் தொடர்பாகக் கதை எழுதியிருக்கிறார்என்று நினைக்கிறேன்

”அதென்ன சுஜாதா கூட “

அவர் உங்களுக்கெல்லாம் முன்னோடிதான்

லதானந்த் said...

மௌ அண்ணா

உங்க கோபத்துக்கான "காரணம்" புரியுது.

"I just said Sujatha also". i have regard to him. Actually he inspired me too.

ambi said...

//விரைவில் எனது சிறுகதைகளை நீங்கள் சின்னத்திரையில் பார்க்கலாம். ஒரு ப்ராஜக்ட் இருக்கு!
//

வாவ்! அப்படியே எந்த சேனல், எத்தனை மணிக்கு?னு முன்னாடியே ஒரு அறிவிப்பு குடுத்துடுங்க. அழுகை சீரியல்னா பாக்க மாட்டேன், இப்பவே சொல்லிட்டேன். :))

ஏதாவது சார் தபால்!னு சொல்ற கேரக்டருக்கு ஆள் வேணுமுங்களா? :p

Unknown said...

கோபமா அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல சார்..

அப்புறம் தானே நீங்க அடைப்புக்குறிக்குள்ள “ காரணம்” சொல்றதுக்கு

இப்ப நான் திருக்குறளுக்கு உரை எழுதிட்டு

கலைஞர், பரிமேலழகர் கூட திருக்குறளுக்கு உரை எழுதிருக்காங்கனு சொல்லிட்டு

Karunanidhi, Parimelazhagar have also written என அர்த்தம் சொன்னால் சரியா வராதில்லியா

அதனால தான் முன்னோடினு சொன்னேன்...

வேஷ்டி சட்டையில தான் அம்சமா இருக்கீங்க..

சிறில் அலெக்ஸ் said...

//எல்டராடோ//

எல்டராடோ வீட்டை விட்டு ஓடிவிட்டு பின்பு திரும்பிய பையன்ன் கதை என நியாபகம்.

கயல்விழி said...

//கலிஃபோர்னியா டார்ம் மேம் எழுதிக் கொடுத்ததுன்னு நினைசீங்களா?
//

மறக்க மாட்டீங்களா நீங்க?

கயல்விழி said...

சுஜாதா சிறந்த ரைட்டர், இல்லை என்று சொல்லவில்லை. இருந்தாலும் யார் கதை எழுதினாலும் அதற்கு சுஜாதா தான் முன்னோடி என்று சொல்லிவிடுவதை ஒப்புக்கொள்ள முடியவில்லை.

ஒருவர் எதிலாவது சிறந்து விளங்கினால் போதும், தமிழ்நாட்டில் உடனே அவரை கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்துவது தேவையற்றது. இதற்கு உதாரணமாக எம்ஜிஆர், அப்துல் கலாம் இப்போது சுஜாதா. சுஜாதாவை விட நல்ல ரைட்டர்கள் உலகில் பிறந்திருக்கிறார்கள் இனிமேலும் பிறப்பார்கள்.

அமர பாரதி said...

லதானந்த் அவர்களே,

கதை நன்றாக உள்ளது. ஆனால் ஆ.வி. யில் முதலிலேயே படித்திருக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். இந்த மாதிரி விசித்திரமான நபர்களை உங்கள் வாழ்க்கையில் சந்தித்ததுன்டா? உங்கள் அலுவல் காரணமாக அடர்ந்த காட்டுப் பகுதியில் சென்ற அனுபவம் இருக்குமே. உங்களுக்கு மூலிகைகள் பற்றிய நாலெட்ஜ் உண்டா?

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

எனது வலைப்பதிவில் மறுமொழி இட்டதற்கு நன்றி.

உங்கள் எல்லா இடுகைகளையும் இன்னும் படிக்கவில்லை. ஒரு சிலவற்றைப்படித்ததில் தோன்றியவை:

ஒரு காட்டுத் துறை அலுவலர், ஒரு எழுத்தாளர் இப்படித் தான் இருப்பார், பழகுவார் என்ற கற்பிதங்களை கட்டுடைப்பது போல இருக்கிறது உங்கள் பதிவு. மகிழ்ச்சி. என்ன எல்லா இடுகையிலும் தங்கள் படத்தைப் போட்டுக் கொள்கிறீர்கள், இவ்வளவு informalஆக எழுதுகிறீர்கள் என்று முதலில் திகைப்பாக இருந்தது. இப்போது இதுவே, தனியாக சிறப்பாகத் தெரிகிறது. நிறைய சுவாரசியமான படங்களையும் வைத்திருக்கிறீர்கள் !!

நானும் கோவையில் பிறந்து சில காலம் வளர்ந்தவன் என்று முறையில் உங்கள் இடுகையின் மொழி நடையைக் காண மகிழ்ச்சி. ஒரு ஐயம்: சில சொற்களில் ல,ள மாற்றிப் போட்டு இருப்பதைக் கண்டேன். இது மக்கள் இப்படித் தான் ஒலிக்கிறார்கள் என்பதற்காக வட்டார ஒலிப்பை வலியுறுத்துவதற்காக சொற்களை எழுத்துப் பிழையாக எழுதுகிறீர்களா என்று தெரியவில்லை. வட்டார வழக்கு புரியாத குழந்தைகள் இவற்றைப் பார்த்து தவறான எழுத்துக்கூட்டலை மனதில் பதித்துக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு. வட்டார வழக்கு இலக்கியத்தில் பெரிய வாசிப்பனுவம் இல்லை. எனவே, இதை எல்லா எழுத்தாளர்களுக்கும் பொதுவான கேள்வியாகவே கேட்கிறேன்.

நன்றி.

Unknown said...

//பாடல்களைப் பார்க்கும்போது உங்களை லதானந்த சித்தர் என்றுதான் சொல்ல வேண்டும். //

ரிப்பீட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

Unknown said...

இந்தக் கதையை முன்பே படித்து வியந்திருக்கிறேன்.உங்களை அறிந்த பின்பு படிக்கும் போது மேலும் வியக்கவைக்கிறது.
எப்படிங்க இதெல்லாம்?

பரிசல்காரன் said...

நேற்றே இதைப் பார்த்தேன் அங்கிள், உங்கள் கதைகள் ஜஸ்ட் லைக் தட் படித்துப் போக மனமில்லை.. ப்ளீஸ், ஞாயிறன்று பின்னூட்டமிடுகிறேனே..