Mar 3, 2009

இரு வாட்சிப் பறவை (ஹார்ன் பில்)
Posted by Picasa

மாமா! பறவைகள் பத்தி ஏதாவது இன்ட்ரஸ்டிங்காச் சொல்லுங்க” என்றாள் மெஹருன்னிஸா.

“ஆனை மலைப் பக்கம் கேம்ப் போயிருந்தப்போ இருவாட்சிப் பறவை களைப் பார்த்தது சுகமான அனுபவம்” என்று ஆரம்பித்தார் ரேஞ்சர் மாமா.

“சுமார் நாலு அடி நீளத்தோட இருக்கிற இருவாட்சிப் பறவைகளின் இறக்கைகள் மஞ்சள், சிகப்பு கருப்பு, வெள்ளை போன்ற வண்ணங்களின் கலவையாக அட்டகாசமாக இருக்கும். இவை அடர்ந்த காடுகள் முதல் வறண்ட புல்வெளிகள் வரை வாழுற இயல்புள்ளவை. பசுமை மாறாக் காடுகளிலும், மழைக் காடுகளிலும் அதிகமாகத் தென்படும். இவைகளுடைய சொந்த பூமி ஐரோப்பாதான். ஒவ்வொரு வகையும் தனித் தனி இயல்போட இருக்கும். இவைகளோட இறக்கைகளை விரிச்சுப் பறக்கிறப்போ வருகிற சத்தம் ஒரு ஜெட் ஏரோப் பிளேன் சத்தம் மாதிரி இருக்கும். இதுகளோட நீளமான் அலகும் வர்ண ஜாலம் காட்டும் இறக்கைகளும், நீளமான வால் போன்ற பகுதியும் பார்க்கிறதுக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கும்.

ஒவ்வொன்றின் அலகே ஒரு காகம் சைஸில் இருக்கும். அதோட ஒவ்வொன்றின் ஓசையும் வித்தியாசமா இருக்கும்.

சிலதோட குரல் கேக்கறதுக்கே பயங்கரமா வெறித் தனமான சிரிப்பு போல இருக்கும். குஷி வந்திட்டா இது போடற கூச்சல் பயங்கரமா இருக்கும். மலையாளத்திலே இதை ‘மல மொரக்கி' அப்படிம்பாங்க! அதாவது மலையையே முறுக்கி விடுற சவுண்ட் பார்ட்டி ன்னு அர்த்தம்.”

“மாமா! ஃபாரஸ்டிலே இருக்கிற எத்தனையோ பறவைகளில் இதுவும் ஒண்ணு! இதிலே என்ன ஸ்பெஷல் இருக்கு?” என்றான் ஜோசப் பால்ராஜ்.
“பொறு கண்ணா பொறு! இருவாட்சிப் பறவை மரப் பொந்திலேதான் முட்டை வைக்கும். அப்போ ஆண் பறவையும் பெண் பறவையும் சேர்ந்து பொந்தையே சீல் வைச்சுக்கும். அதைப் பத்தி விவரமாப் பிறகு சொல்லுறேன். மொதல்லே பொதுவான சில விஷயங்கள். அப்புறமா ஸ்பெஷல் விஷயங்கள்! சரியா?” என்றவர் தொடர்ந்தார்.

“உலகத்திலே மொத்தம் 54 வகை இருவாட்சிப் பறவை வகை இருக்கு. அதிலே 31 வகை ஆசியாவைச் சேர்ந்தது. 9 வகை இந்தியாவிலே இருக்கு.

கிரேட் இந்தியன் ஹார்ன் பில், ஹெல்மிட் இருவாட்சிப் பறவை, காண்டா மிருக மூக்கு ஹார்ன் பில் போன்றவை முக்கியமானவை. ஆப்பிரிக்காவிலும் நிறைய வகை இருவாட்சிப் பறவை வகைகள் இருக்கு.

நாலு முதல் முப்பது சதுர கிலோ மீட்டர் வரை இவைகளோட எல்லை இருக்கும். ஒவ்வொன்றும் தங்கள் எல்லை வகுத்துக் கொண்டு அதுக்குள்ளேதான் சுற்றி வரும்.

ஆசியாவில் கிழக்கு ஜாவாவிலும் இந்தோனேஷியாவிலும் இருவாட்சிப் பறவை இனங்கள் நிறைய இருக்கு. இவைகள் ஜுவில் ரொம்ப சாதுவா இருக்கும். இருவாட்சிப் பறவைகளிலேயே பெரிய வகை கிரேட் பைட் ஹார்ன்பில் ஆகும் (Great Pied Hornbill).

இவைகளோட அலகுகளின் ஷேப்பை வைத்தே இவைகளுக்கு ஹெல்மெட் இருவாட்சி, செங்கொண்டை இருவாட்சி, காண்டா மிருக இருவாட்சின்னெல்லாம் பேரு இருக்கு. இவைகளோட பிரத்தியேகமான அலகுகளாலே நிறைய அனுகூலங்கள் இருக்கு. உதாரணமா ஓணான், பாம்பு, சில சமயம் பறக்கிற அணில் இந்த மாதிரி பெரிய உணவு ஐட்டங்களை ரொம்ப ஈஸியா இந்த அலகுகள் மூலம் கவ்விக் கொள்ளும். பொந்தை சீல் வைக்க இந்த அலகுகள் ரொம்ப உதவியா இருக்கும்.

”இதுகள் என்ன மாமா தின்னுண்டு இருக்கும். நேக்குச் சொல்வேளா?” என்றாள் ஷைலஜா.

”இருவாட்சிப் பறவைகள் பெரும்பாலும் பழங்களையே விரும்பிச் சாப்பிடும். அதனாலே இவைகள் விதைகள் பல்வேறு இடங்களுக்குப் பரவ முக்கியமான காரணிகளாகும்.

அத்தோட சில வகைப் பழங்களோட விதைகள் கெட்டியான தோலோட இருக்கும். அந்த மாதிரி விதைகள் இருவாட்சிப் பறவைகளாலே விழுங்கப்பட்டு எச்சத்தோட கலந்து வெளியே வரும்போது விதைத் தோல் மென்மையாகி மண்ணில் விழும்போது ஈசியா விதைகள் முளைச்சிடும்.

சில சமயம் ஒரு சேஞ்சுக்கு ஓணான், பாம்பு மாதிரி பிராணிகளையும் இருவாட்சிப் பறவைகள் டேஸ்ட் பாக்கும். இந்த மாதிரி மழைக் காடுகளில் மர இனங்கள் பரவ மிக முக்கியமான காரணமா இருப்பதாலே இதை key stone species அப்படின்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்லுவாங்க.”

“ஆமா! மத்த இனங்களோட வளர்ச்சிக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணுறவைகளுக்கு key stone species அப்படின்னு பேருன்னு எங்க பயாலஜி மிஸ்கூட சொல்லியிருக்காங்க” என்று ஆமோதித்தாள் அடிக்கடி டவுட் கேட்கும் பரணி.

“வேற எந்தப் பறவை கிட்டேயும் பாக்க முடியாத அதிசய சமாச்சாரம் ஒண்ணு இருக்கு. ஹார்ன் பில்களாலே சொந்தமாக் கூடு கட்ட முடியாது. இந்தப் பிரச்சினை இருக்கிறதாலேதான் ஹார்ன் பில்களோட எண்ணிக்கையும் அதிகமாக ஆகாமல் இருக்கு. சொந்தமாக் கூடு கட்ட முடியாததினாலே ரெடி மேடா மரப் பொந்துகளை இவைகள் தேடும். இயற்கையாவே இருக்கிற மரப் பொந்துகளோ அல்லது மரங்கொத்திப் பறவைகளால் ஏற்கனவே மரங்களில் துருவப்பட்டு உருவாக்கப்பட்ட பொந்துகளையோ இருவாட்சிப் பறவை பயன் படுத்திக்கும்.

ஒரு ஆண் பறவையும் பெண் பறவையும் குடும்பம் நடத்த ஆரம்பிக்கும் முன்னர் ஆண் பறவை காட்டுக்குள்ளே நல்லா சுத்திப் பார்த்துப் பெண் பறவை முட்டையிட வசதியா சுமார் 30 மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்ட மிகப் பெரிய வெள்ளைக் குங்கிலியம், நாவல் போன்ற மிக உயரமான மரங்களில் சில மரப் பொந்துகளைத் தேர்வு செய்து வைக்கும். பிறகு தன்னுடைய ஜோடியான பெண் பறவையை அழைத்து வந்து தன்னுடைய செலக்க்ஷனையெல்லாம் காட்டும். அதிலே ஒண்ணைப் பெண் பறவை ஓகே செய்த பிறகுதான் இரண்டும் குடும்பம் நடத்தவே ஆரம்பிக்கும்.

ஒரு பொந்து செலக்ட் ஆயிடுச்சினா அதே பொந்தைதான் அந்த ஜோடி வருஷா வருஷம் மறுபடி தேடி வரும். முட்டை வைக்கிற தருணம் வந்ததும் பெண் பறவை மரப் பொந்துக்குள்ளே போய் உக்காந்துக்கும்.

களிமண், அழுகிப் போன மரத்துண்டுகள், இரைப் பையிலிருந்து வாய்க்குக் கொண்டு வரும் உணவு, தங்களோட எச்சம் இந்த மாதிரி பொருள்களைக் கொண்டு பொந்தின் வாயைப் பெண் பறவை மூடி சீல் வைச்சுக்கும். இப்படி சீல் வைக்க 3 முதல் 7 நாள் வரை ஆவும். இதற்குத் தேவையான பொருளையெல்லாம் ஆண் பறவையும் சப்ளை பண்ணும். உணவு கொடுப்பதற்காக ஒரே ஒரு சின்ன துவாரம் மட்டும் மூடப்பட்ட பொந்தில் ஏற்படுத்திக் கொள்ளும். பிறகு பெண் பறவை முட்டை இட்டு அடை காக்கும்.


அடை காப்பதற்கு முன்னர் பெண் பறவை தன்னோட அழகிய இறக்கைகளை யெல்லாம் உதிர்த்து விடும். அந்த இறக்கைக் குஷன் மேலேதான் முட்டையிடும். பெரிய இனங்கள் ஒன்று முதல் இரண்டு வரை முட்டைகள் இடும். சின்ன இனங்கள் 8 வரையும் கூட முட்டைகள் போடும்.

அடை காக்கும் காலத்தில் பெண் பறவைக்குத் தேவையான உணவினை ஆண் பறவை சேகரிச்சுக் கொண்டு வந்து பொந்தில் அமைத்த துவாரத்தின் மூலம் பெண் பறவைக்குத் தரும்.

அதுவும் எப்படித்தெரியுமா? பெண் பறவைக்கு ரொம்பப் பிடிச்சது அத்தி, ஆல் போன்ற பழங்கள்தான். ஆண் பறவை நிறையப் பழங்களை விழுங்கிக் கொள்ளும். பெண் பறவை இருக்கிற கூடு கிட்ட வந்து வயத்திலிருந்து ஒவ்வொரு பழமா வாய்க்குக் கொண்டு வந்து ஜோடிக்கு ஆசை ஆசையாய் ஊட்டும்”

“ஐயே!” என்றாள் சந்தனமுல்லை முகத்தைச் சுழித்துக்கொண்டே.

“அடை காக்கும் காலம் 40 நாள் முதல் 60 நாள் வரையும் இனத்துக்குத் தக்க வாறு மாறுபடும். குஞ்சு பொறித்ததும் சுமார் ஒருமாசம் வரை அம்மாவோட பாதுகாப்பிலே குஞ்சுப் பாப்பாவெல்லாம் இருக்கும். குஞ்சு பொறித்ததும் அதுகளுக்கும் சேர்த்து அப்பாப் பறவை உணவு கொண்டு வந்து தரும். இப்படியே 3 முதல் நாலு மாசம் வரை கூட நடக்குமுன்னாப் பார்த்துக்கோங்களேன்!

குஞ்சு பொறித்த 3 அல்லது 4 நாள் கழித்து மூடி சீல் வைக்கப் பட்ட பொந்தின் வாயை உடைத்துப் பெண் பறவையை ஆண் பறவை ரிலீஸ் செய்யும். பெண் பறவை வெளி வந்த உடனே இரு பறவைகளும் சேர்ந்து பொந்தின் வாயை மறுபடியும் சீல் வைச்சிடும். இந்த நடை முறை வேற எந்தப் பறவையினமும் செய்யாத ஒண்ணுதானே!

ஓரளவு குஞ்சுகள் பெரிசானதும் சீல் மறுபடி உடைச்சுக் குஞ்சுகள் ரிலீஸ் ஆவும்.

வெள்ளைக் கொண்டை ஹார்ன் பில் என்ற வகையில் பொந்தை சீல் வைக்கவும் குட்டிப் பாப்பாக்களுக்கு உணவு தருவதற்கும் அதே கூட்டத்தைச் சேர்ந்த மத்த பறவைகளும் ஹெல்ப் பண்ணும். ஆனா தரையில் திரியிற சில ஹார்ன் பில் வகைகள் இது மாதிரி செய்யறது கிடையாது.

“சரி! ஏன் இருவாட்சிப் பறவைகள் மட்டும் இப்படித் தங்களோட கூடுகளைத் தாங்களே சீல் வைச்சுக்கணும்?” என்றான் மாதப்பன்.

“அருமையான கேள்வி!” என்று சிலாகித்த ரேஞ்சர் மாமா, “அடை காக்கிற காலம் அதிகமா இருப்பதாலே அதிகத் தடவை முட்டை போடுற வாய்ப்பு இருவாட்சிப் பறவைகளுக்குக் கம்மி. மேலும் இருவாட்சிப் பறவைகள் தங்கள் வாழ்நாளில் கணிசமான பகுதியை அடைகாக்கிறதிலேயே கழிச்சிடுங்க. அதனாலே வைக்கிற கொஞ்ச நஞ்ச முட்டைகளையும் இந்த மாதிரி சீல் வைச்சுகிறதாலே முட்டைகளைத் தின்னும் பாம்புகள் கிட்ட இருந்து காப்பாத்திக்கிறதுக்காகத்தான் இப்படி சீல் வைச்சுக்குதுங்க.” என்றார்.

“தாய்லாந்திலே மாஹிடோ பல்கலைக் கழகத்தில் இருவாட்சிப் பறவை ஆராய்ச்ச்சி மையம் ஒண்ணை உருவாக்கிப் பல ஆராய்ச்சி செய்யறாங்க!

1980ல் காவோ யாய் தேசியப் பூங்காவிலே இந்த ஆராய்ச்சி தொடங்கினாங்க. இருவாட்சிப் பறவைகளுடைய பல்வேறு அம்சங்களோட இப்ப அவைகளோட எண்ணிக்கை பத்தியும் விரிவா ஆராய்ச்சி நடக்குது.

மாசக் கணக்கிலே மரங்களின் உச்சியில் பரண் அமைச்சு இந்த நடவக்கைகளையெல்லாம் பதிவு பண்ணியிருக்கிறாங்க. பொள்ளாச்சிப் பக்கம் இருக்கிற டாப் சிலிப் பகுதியில் கூட இருவாட்சிப் பறவைகளைப் பரண் அமைச்சுக் கவனிச்சிருக்கிறாங்க!

தாய்லாந்தில் பிலாய் பூன்ச்வாட் அப்படிங்கற பெண்மணி இந்தப் பறவைகளைப் பத்தி நிறைய ஆராய்ச்சி பண்ணி இருக்கிறாங்க!”

“ஏன் மாமா? மாசக் கணக்கிலே அடை காத்திட்டு வெளியே வராமலே இருக்கும்னீங்க! அப்ப எச்சமெல்லம் போட்டுப் பொந்து அசிங்கம் ஆகிடாதா?” என்றாள் க்ருதிகா..

“இந்தப் பறவைகள் ரொம்ப மடி ஆச்சாரமானவை. ரொம்ப நாள் பொந்துக்குள்ளேயே அடை பட்டு இருந்தால் வெளியேறும் எச்சமெல்லாம் பொந்தை அசிங்கப் படுத்திடாதா? அதுக்கும் ஒரு ஐடியா பண்ணும். ஆண் பறவை உணவு கொடுக்க ஏற்படுத்தின துவாரத்துக்கு ரொம்பக் கிட்டக்க வால் புறத்தை வைச்சு அந்த துவாரத்தின் வழியாகவே ரொம்ப ஃபோர்ஸா எச்சத்தை வெளியேத்தும். அப்போ ஒரு பஸூக்கா மாதிரி சத்தம் கேக்கும்.

இதிலே ஒரு ஆச்சரியம் என்னன்னா முட்டையிலிருந்து வெளிவருகிற குஞ்சுகளும் இதே முறையில் தங்களோட எச்சத்தை வெளியேத்துறதுதான். அதனாலே பொந்து அசிங்கம் ஆவாமல் இருக்கும்.

அத்தோட சாப்பிட்டு வேஸ்ட் ஆன உணவுத் துகள்களையும் தாய்ப் பறவை தன்னோடஅலகால் கவ்வி அதே துவரத்தின் மூலம் வெளியே போட்டுடும். இதனால் இருவாட்சிப் பறவை அடை காக்கும் மரப் பொந்து உள்ள மரத்தின் அடிப் பக்கத்தில் தரை மேலே இதோட எச்சங்கள் நிறையத் தென்படும்.

சில சரணாலயங்களில் முகாம் யானைகளுக்கு ஆலம் மரக் கிளைகளையும் இளம் ஆலஞ் செடிகளையும் உணவாய்த் தருவதைக்கூட நிறுத்திட்டாங்க. ஏன்னா இருவாட்சிப் பறவைகளோட விருப்பமான உணவே ஆலம் பழங்கள்தான். இந்தோனேஷியாவின் “ஸ்டேட் பேர்ட்” ங்கிற அந்தஸ்து இருவாட்சிப் பறவைகளுக்கு உண்டு. இதை அதிர்ஷ்டத்தின் அடையாளமாக அங்கே நினைக்கிறாங்க.

“ரொம்ப அருமையான பறவையாய் இருக்கே! இதைப் பாதுகாக்க என்ன செய்யணும்?” என்று கேட்டாள் மீன்மகள்.

“ஒரு தடவை அடை காத்த மரத்திலேதான் அடுத்த தடவையும் அடை வைக்க இருவாட்சிப் பறவை வரும்கிறதாலே இருவாட்சிப் பறவை கூடு கட்டின மரங்களைப் பாதுகாக்கிறதும் அந்தப் பறவைகளை மாமிசத்துக்காகவோ இறக்கைகளின் அழகுக்காகவோ எந்தக் காரணம் கொண்டும் வேட்டையாடாமல் இருப்பதும்தான் அவைகளுக்கு நாம செய்கிற கைம்மாறாகும்!” என்று முடித்த படி எழுந்தார் ரேஞ்சர் மாமா. சுட்டிகள் பறந்தோடினர்.

******************************************************************

10 comments:

நாதஸ் said...

Very Interesting post on Horn Bill.
Thanks a lot Sir for the info !!!

sindhusubash said...

போன பதிவுல என்னத்துக்கு பேட்டினு கண்டுபிடிக்க முடியலை.ரொம்பவே சுவாரஸ்யமா இருக்கு ஹார்ன்பில் பத்தி எழுதினது.

ஆளாளுக்கு ஒரு பேரை சொல்லி கூப்பிடறாங்க உங்களை..நா கூட ஒரு பேரை செலக்ட் பண்ணி வைச்சிருக்கிறேன்.

வடுவூர் குமார் said...

மலேசியா பகுதிகளில் இப்பறவைகள் அதிகமாக காணப்படுகின்றன.
மேல் விபரங்கள் அருமை.

Suresh said...

Eppa nerya thirami iurku ungaluku oru paravaiyapathi eppadi alazha eluthi irukinga

Suresh said...

வாழ்த்துக்கள் ! நண்பரே நல்ல பதிவு, நானும் ஒரு பதிவு செய்து உள்ளேன் பிடித்தல் போடுங்க வோட்டு :-)

லதானந்த் said...

நாதாஸ்!
இந்த மாதிரி பின்னூட்டங்கள் மேலும் மேலும் எழுதத் தூண்டுது. நெம்ப நன்றி.

சிந்துசுபாஷ்!
Forest fire பத்தின பேட்டி அது. நெம்பப் பேரு பாத்துட்டு போன்ல சொன்னாங்க. அத விடுங்க. எனக்குனு செலக்ட் பண்ணி வெச்சிருக்கிற பேர ஒடனே ஒடனே ஒடனே சொல்லுங்க.

வடுவூர் குமார்!
ஒங்க தகவலுக்கு சந்தோஷம்.

சுரேஷ்! பாராட்டுக்கு நெம்ப நன்றி! சமயங் கெடைக்குறப்போ ஒங்க பதிவை அவசியம் படிப்பேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இவை அமேசன் காடுகளில் கூடக் காணப்படுகின்றன. சில விபரணங்களில் பார்த்த ஞாபகம்.
இவற்றின் சொந்தப் பூமி ஐரோப்பா என்பது ஆச்சரியமாக உள்ளது. இங்கே காட்சியகம் தவிர எங்குமே
காணக் கிடைக்கவில்லை.

ஜோசப் பால்ராஜ் said...

ஒரு முழுமையான தகவல் களஞ்சியமா இருக்கு இந்தப் பதிவு.
மிக அருமையான விவரங்கள் சுட்டிகளுக்கு நெம்ப சுலபமா புரியுறமாதிரி சொல்லியிருக்கீங்க.

ரிதன்யா said...

இன்னும் நெம்ப விசயம் தெரியனுங்,
உங்க பொறவாலயே வாரொம். சொல்லிகுடுங்க, சித்த புண்ணியமா போவும்.

ஷைலஜா said...

இதுகள் என்ன மாமா தின்னுண்டு இருக்கும். நேக்குச் சொல்வேளா?” என்றாள் ஷைலஜா>>>>>


குறும்பு பண்றேளாக்கும்!!!