Jun 14, 2009

எறும்பு தின்னி


“பல்லே இல்லாத ஒரு பாலூட்டி மிருகத்தைப் பத்திச் சொல்லட்டுமா?” என்ற பீடிகையோடு பேச ஆரம்பித்தார் ரேஞ்சர் மாமா.

சுட்டிகள் ஆர்வமாகக் கேட்கத் தொடங்கினார்கள்.

“எறும்பு தின்னிதான் அது!” என்றவரை இடைமறித்தான் மாதப்பன். பல்லே இல்லாத அது அப்புறம் எப்படி மாமா தன்னோட ஆகாரத்தை மெல்ல முடியும்?”

“பொறுடா முந்திரிக்கொட்டை! மொதல்ல அதைப் பத்திப் பொதுவான விஷயங்களைச் சொல்றேன்” என்றார் ரேஞ்சர் மாமா.

“இந்திய எறும்பு தின்னியோட விலங்கியல் பேரு மணிஸ் கிரஸிகாடேடா (Manis crassicaudata). ஆங்கிலத்திலே ‘பெங்கோலின்' அப்படின்னு சொல்லுவாங்க. பெங்கோலின்கிற வார்த்தை மலாய் மொழியிலிருந்து வந்தது. மலாய் பாஷையில் ‘பெங்குலிங்' அப்படின்னா “சுருண்டு கொள்வது” அப்படின்னு அர்த்தம். எதிரிகளைப் பார்த்தா எறும்பு தின்னியும் தன்னோட உடம்பை சுருட்டிப் பந்து மாதிரி பண்ணிக்கும். அதனாலேதான் இந்தப் பேரு வந்தது.”

“எறும்பு தின்னி எப்படி இருக்கும் மாமா? என்றாள் ஜெயலட்சுமி.

“எறும்பு தின்னிகளிலே மொத்தம் ஏழு இனங்கள் இருக்கு. இதோட நீளம் 60 லிருந்து 75 செ.மீ வரை இருக்கும். 11 - 77 பவுண்டு எடை. வாலோட நீளம் 45 செ.மீ. இருக்கும். மரங்களில் ஏறுவதுக்கு இந்த வால் ரொம்ப யூஸ் ஆவும். பெண் மிருகத்தை விட ஆண் மிருகம் கொஞ்சம் பெருசா இருக்கும்.

இந்த மிருகத்தோட ஸ்பெஷாலிடியே அதோட செதில்கள்தான். ரோமங்கள் இயற்கையாகவே ஒண்ணாகி இந்த செதில்களா மாறி இருக்கு. நீள வாக்கிலே 11லிருந்து 13 வரைக்கும் வரி வரியா பெரிய செதில்கள் ஒண்ணு மேல ஒண்ணு அடுக்கி வெச்ச மாதிரி இருக்கும். பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்திலே செதில்கள் இருக்கும்.

“இந்த செதில்களாலே என்ன மாமா யூஸ்?” இது சத்யாவின் கேள்வி.

“அருமையான கேள்வி!” என்று சிலாகித்தார் ரேஞ்சர் மாமா.

“இந்த முக்கோண வடிவ செதில்கள் ஒரு கவசம் மாதிரி எதிரிங்க கிட்டே இருந்து ஓரளவுக்கு இதைப் பாதுகாக்கும். புலி மாதிரி விலங்குகளுக்கு எறும்புதின்னிகளைச் சாப்பிட ரொம்பப் பிடிக்கும். அப்படி ஏதாவது எதிரிங்க அட்டாக் பண்ண வந்தா மரவட்டை மாதிரி சுருண்டு படுத்திட்டு செதில்களை மேல் நோக்கி செங்குத்தா நீட்டிக்கும். அதோட ரொம்ப மோசமான வாசனையோட மஞ்சள் நிறம் கொண்ட ஒரு திரவத்தை தன்னுடைய வாலுக்குப் பக்கத்திலிருக்கிற சுரப்பியிலிருந்து பீச்சியடிக்கும். இந்த செதில்கள், தான் பிடிக்கும் இரையோட தாக்குதலில் இருந்தும் காப்பாத்திக்க உதவுது. ஒட்டுணிக்கள் தாக்குதலும் தவிர்க்கப் படுது. வளை தோண்டும்போது கூர்மையான பாறைக் கற்கள் தோலைக் கிழிக்காம இருக்கவும் இந்தச் செதில்கள் உபயோகமாயிருக்கு! இந்த செல்களோட எடை மிருகத்தோட எடையில் கால் பாகத்திலிருந்து மூணில் ஒரு பாகம் வரைகூட இருக்கும்.

இது ராத்திரியில் மட்டும் வெளியே நடமாடும். பகலிலே வளைகளிலே சுருண்டு படுத்திருக்கும். இது மாதிரி ராத்திரியிலே மட்டும் வெளியே நடமாடும் பிராணிகளை நாக்டர்னல் அனிமல் (Noctarnal animal) அப்படின்னு இங்கிலீஷிலே சொல்லுவாங்க. நடக்கும் போது இதோட முன்னங்கால் விரல்கள் பாதத்துக்கு அடியிலே மடிஞ்சிருக்கும்.இதோட காது மடல்கள் ரொம்பச் சிறுசா இருக்கும். இதுக்குப் பல் கிடையாதுங்கிறது ஆச்சரியமான விஷயம். தலை சிறுசாயும் முக்கோண வடிவத்திலேயும் இருக்கும். சின்னக் கண்களும் தடிமனான இமைகளும் இருக்கும். மேல் தாடை குறுகலாவும் கூர்மையாயும் இருக்கும். வயிறோட அடிப் பாகத்தில் லேசா ரோமம் இருக்கும். ஒவ்வொரு காலிலும் 5 கூர்மையான நகங்கள் இருக்கும். பாலூட்டிகளில் இப்படி செதில்கள் இருக்கிறது ரொம்ப அபூர்வம். ஏராளமன உமிழ்நீர்ச் சுரப்பிகள் இருக்கிறதாலே எப்பவுமே இதோட நாக்கு வழ வழன்னு ஈரப் பசையோடவே இருக்கும். புத்துக்குள்ளே நாக்கை விடும்போது அதிலே கறையான்களும் எறும்புகளும் ஒட்டிக்கும். புத்துக்குள்ள தலையை நுழைக்கிறப்போ எறும்பு உள்ளாற போகாதபடி நாசித் துவாரங்களை மூடிக்கும்!

இதோட மாமிசத்துக்கும் செதில்களுக்கும் நல்ல மருத்துவ குணம் இருக்குன்னு ஆதிவாசிகள் நம்புறதாலேயும் இது அதிக அளவிலே வேட்டையாடப் பட்டும் வந்திருக்கு. அதனாலே இதனோட எண்ணிக்கை கணிசமாக் கொறைஞ்சிருக்கு.”

“எறும்பு தின்னி எங்கெல்லாம் இருக்கு?” என்றாள் தங்கமணி.

“காடுகளிலும் மலைச் சரிவுகளிலும் மலை அடிவாரங்களிலேயும் இது அதிகமாத் தென்படும். இமயமலைக்குத் தெற்கேயிருந்து தென்னிந்தியாவின் கடைக்கோடி வரைக்கும் இதைப் பார்க்கலாம். நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் இங்கெல்லாமும் இது இருக்கு.”

“இது எப்படி மாமா எறும்புங்களைத் தின்னுது?” என்றாள் லீலாவதி.

“இதோட மெயின் ஆகாரம் எறும்பு, கறையான் இதுங்கதான். அதுங்களோட முட்டைகளையும் லபக் பண்ணிடும். ஏறக்குறைய முன்னங்கால் அளவுக்கு நீளமுள்ள நகங்கள் மூலமா எறும்பு, கறையான் இதுங்களோட புற்றுங்களைச் சிதைச்சுத் தோண்டி அதுங்களை தின்னும். இந்த மாதிரி வேலைக்கு இதோட நீளமான நாக்கு ரொம்ப யூஸாவும். நாக்கு 23 செ.மீ முதல் 25 செ.மீ நீளம் வரை இருக்கும்னாப் பர்த்துக்கோங்களேன். பொதுவா தரையிலேயே இது அலைஞ்சாலும் மரத்திலிருக்கிற எறும்புகளை டேஸ்ட் பார்க்க மரங்களிலும் இது ஏறும்.”

“ஜனவரி, மார்ச், ஜுலை மாசங்களிலே பொதுவாக் குட்டி போடும். சாதாரணமா ஒரு குட்டிதான் போடும். அபூர்வமா ரெட்டைப் பிறவிகளும் பிறக்கிறதுண்டு. கர்ப்ப காலம் 65லிருந்து 70 நாள் வரை. பிறக்கிற குட்டியோட எடை 200லிருந்து 500 கிராம் வரை இருக்கும். பிறந்த குட்டியோட செதில் ரொம்ப மென்மையா இருக்கும். பிறந்த உடனேயே தவழ்ந்து நடக்க ஆரம்பிச்சிடும். ஒரு மாசம் வரை தாயோட வாலின் அடிப் புறத்திலேயே பாதுகாப்பா இருக்கும். குட்டியோட இருக்கும் தாய் கிட்டே எதாவது எதிரிங்க வந்தா குட்டியை நடுவிலே மறைச்சு தன்னுடைய சுருட்டிய உடம்புக்குள்ளார வச்சு மறைச்சிடும்!


3 மாசத்துக்கப்புறம் தாய் கிட்டேயிருந்து பிரிஞ்சு போயிடும். ஜுவில் 13 வருஷம் வரைக்கும் உயிரோட இருந்திருக்கு. தனியாவே வாழும். சேர்க்கைச் சமயத்தைத் தவிர மத்த சமயங்களில் தனியாவேதான் வசிக்கும்.

மண்ணோட தன்மையைப் பொறுத்து இதோட வளைகள் தரைக்கடியில் 2 மீட்டரிலிருந்து 6 மீட்டர் வரை ஆழம் இருக்கும். எதிரிகள் கிட்ட அகப்படாமலிருக்க வளையோட வாசலை லேசா மண்ணைப் போட்டு மூடி வச்சிருக்கும். இதுங்களுக்குக் கூர்மையான கண் பார்வையோ சத்தங்களைக் கேக்கும் திறமையோ கிடையாது. ஆனா வாசனைகளை ரொம்ப நல்லாத் தெரிஞ்சிக்கும். எறும்பு, கறையான் இதுங்களோட புற்றுக்களை அதோட வாசனை மூலமா கண்டு பிடிச்சிடும். புற்றுங்களைக் கண்டுபிடிச்சதும் அதை நகங்கள் மூலமாத் தோண்டும். நகங்கள் மடிஞ்சிருக்கும். நகங்கள் தேஞ்சு போகாமலிருக்க இந்த ஏற்பாடு! அப்புறம் தன்னோட நீளமான நாக்கைப் புத்துக்குள்ளே விட்டு எராளமான் எறும்பையோ கறையானையோ சாப்பிட்டுடும்.

பல் இல்லாததாலே அரைக்கிறதெல்லாம் வயத்துக்குள்ளேதான். இதோட வயத்துக்குள்ளே ரெண்டு அறைகள் இருக்கும். ஒண்ணு சேமிச்சு வச்சுக்கிறதுக்கு. இன்னொண்ணு உணவை குடலுக்குப் போறதுக்கு முன்னாடி நல்லா அரைச்சு அனுப்பறதுக்கு. அரைக்க வசதியா இந்தப் பகுதியில் கடினமான தோல் இருக்கும்.

“எறும்புதின்னிகளாலே என்னா மாமா நமக்கு உபயோகம்?” என்றாள் கீதா.

“பயிர்களுக்கும் கட்டிடங்களுக்கும் கெடுதல் பண்ணுற கறையான்களை இது சாப்பிடுறதாலே மனுஷங்களுக்கு மறைமுகமா ரொம்ப யூஸ் ஆவுது. சில இடங்களில் இதோட மாமிசத்தையும் சாப்பிடுறாங்க. மாமிசம் வாத்துக் கறி மாதிரி டேஸ்ட் இருக்குமாம். இதுங்களோட செதில்களைப் பொடி பண்ணிச் சாப்பிடா மனுஷங்களோட ஆண்மையை அதிகரிக்கும் மருத்துவ குணம் கொண்டதுன்னு ஒரு நம்பிக்கை இருக்கு. இந்த செதில்கள் நெக்லஸ் பண்ணுறதுக்கும் பயன்படுது. இந்த மிருகத்தோட தோலில் இருந்து ஷுக்களும் செய்யறாங்க.

சமயங்களில் இது ஊருக்குள்ளும் வந்திடும். அப்படித்தான் ஒரு தடவை திருப்பூருக்குப் பக்கத்தில் இருக்கிற ஸ்கூலில் இருந்து ஒரு நாள் ஃபோன் வந்திச்சு. போய்ப் பார்த்தா ஒரு கிளாஸ் ரூமில் ஒரு மூணு வயசு மதிக்கத்தக்க எறும்பு தின்னி ஒண்ணு படுத்திருக்கு! அப்புறம் அதை நைசா ஒரு சாக்குப் பையிலே பதுகாப்பா எடுத்திகிட்டுப் போய் ஆனைகட்டிக் காட்டுப் பகுதியிலே விட்டோம்.

கடைசியா ஒரு ஆதிவாசி எங்கிட்டே எறும்புதின்னி பத்தி சொன்ன ஒரு ‘திடுக்' விஷயத்தைச் சொல்றேன்.

அந்த ஆதிவாசியோட சொந்தக்காரன் ஒரு எறும்புதின்னியக் கல்லாலே அடிச்சிருக்கான். அது மயக்கமா விழுந்திருக்கு. இவனும் அதை எடுத்துக் முன்னங்கால் ரெண்டும் ஒரு தோளிலயும் பின்னங்கால் ரெண்டும் இன்னொரு தோளிலும் இருக்காப் போல் மாலை மாதிரி தன்னோட கழுத்தை சுத்திப் போட்டுகிட்டு நடந்து வந்தானாம். பாதி வழியிலே எறும்புதின்னிக்கு மயக்கம் தெளிஞ்சிருக்கு. உடனே ஏதோ ஆபத்துங்கிறதைப் புரிஞ்சிகிட்டுத் தன்னோட உடம்பை அவனோட கழுத்தைச் சுத்திச் சுருட்டி இறுக்கி இருக்கு. அவ்வளவுதான் என்ன பண்ணியும் அதை உதர முடியாம மூச்சுத் திணறி செத்தே போயிட்டனாம் அவன்.

******************************************************************

13 comments:

ungalrasigan.blogspot.com said...

எறும்புதின்னியைப் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யமானவை. கடைசி பாரா திகிலூட்டுகிறது. அதென்ன எறும்புதின்னியா, மனுஷன்தின்னியா? மொத்தத்தில், ஒரு என்சைக்ளோபீடியா படித்த திருப்தி!

நாதஸ் said...

Thanks for the interesting facts !

Unknown said...

உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

ரெண்டு said...

பதிவு ரொம்ப நல்லயிருக்குங்க,

கோகுலம் மாத இதழில் கொ.மா.கோதண்டம் என்பவர் இதைப்போல எழுதுவார். அறிவியல் செய்திகளை எளிமையான நடையில் கூறும் உங்கள் முயற்சி பாராட்டதக்கது.

Anand, Salem said...

ஒரு சின்ன சந்தேகம். எறும்பு அதோட நாக்குல கடிச்சுடாதா?

Sundar சுந்தர் said...

thanks!

மங்களூர் சிவா said...

எறும்புதின்னியைப் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யமானவை.

குறும்பன் said...

ரேஞ்சர் மாமாவுக்கு எறும்பு தின்னி கறி தின்ன அனுபவம் உண்டான்னு ஏன் ஒருத்தரும் கேக்கலை? அதனால நான் கேட்குறேன். இஃகி

Unknown said...

Noctarnal ?

லதானந்த் சார் அது

Nocturnal இல்லியோ

சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக் தான்

இரா. வசந்த குமார். said...

அன்பு லதானந்த் சார்...

படித்தவுடன் சில கேள்விகள் கிடைத்தன.

அ. ஏன் 'எறும்புதின்னி'? ஏன் 'கறையான் தின்னி' இல்லை?

ஆ. சுள்ளெறும்பு மட்டும் நம்மைக் கடிக்கின்றதே? சாமி எறும்பு கடிப்பதில்லையே, ஏன்?

இ. பல்லிகளால் மட்டும் எப்படி டைனோசர் காலத்திலிருந்து இன்னும் சர்வைவல் பண்ண முடிகின்றது?

ஈ. கரப்பானை அணுகுண்டு அசைக்க முடியாதாமே, உண்மையா..?

உ. முதுகில் ஏறி உராயும் போது, பெண்ணின் செதில்கள் ஆண் எறும்புதின்னிக்கு எரிச்சல் உண்டாக்காதா..? (இது ச்சும்மா உங்க ஃபைனல் டச்சுக்காக..!) :)

நன்றிகள்.

நாஞ்சில் நாதம் said...

நல்ல தகவல். எளிய நடை.

நாஞ்சில் நாதம் said...

நல்ல தகவல். எளிய நடை.

Anonymous said...

Yea when we were kids Revathi used to write in Gokulam about animals...Felt like reading Gokulam... Nice blog.

I wish, I knew abt ur blog earlier itself.

I had an ant eater as my pet. that one is lazy one. Only eat milk. Even if you take near ants it dun eat. such a lazy one. Its kid was so soft..

Btw, There is a phrase as "Azhungu Pidi" abt ant eater.