Jul 6, 2009

கண்டம் விட்டுக் கண்டம் தாவும் பறவைகள்

அத்தியாயம் 1


“மாமா! உங்க வீட்டுக்கு ஒரு முறைதான் வந்திருக்கேன். அதனாலே வழி தவறிப் பக்கத்துக் குவார்டர்ஸுக்குள்ளே போயிட்டேன்” என்றாள் புதிதாக ஃபாரஸ்ட் காலனிக்கு வந்திருந்த ஜெயலஷ்மி.

“ஏம்மா! இவ்வளவு பக்கத்திலிருக்கிறப்போவே வழியை மறந்திட்டியே! சில பறவைங்க லட்சக் கணக்கான மைல் பறந்து கரெக்டா போய்ச் சேர வேண்டிய நாடுகளுக்குப் போவுதே தெரியுமா?” என்றார் ரேஞ்சர் மாமா.

“பறவைகள் வலசை போதல் அப்படிம்பாங்களே அதுதானே மாமா?” என்று ஆர்வமாய்க் கேட்டான் மாதப்பன்.

“அதேதான்பா. சில பறவைகள் ஒரு கண்டத்திலேயிருந்து இன்னொரு கண்டத்துக்கும் கூட விருந்தாளிங்க வந்து போற மாதிரி வந்திட்டுத் தங்களோட சொந்த நாட்டுக்கே திரும்பிப் போயிரும்” என்றபடி ஆரம்பித்தார் ரேஞ்சர் மாமா.

“அரிஸ்டாட்டில், ஹோமர் இவங்கெல்லாம் கூட இதைப் பத்திக் குறிப்பிட்டிருக்காங்க. பைபிளில் கூட பறவைகள் வலசை போறதைப் பத்திச் சொல்லப் பட்டிருக்கு”

“எதுக்கு மாமா அதுங்க இவ்வளவு கஷ்டப்பட்டு இவ்ளோ தூரம் பறந்து வருதுங்க?” இது மாலதியின் கேள்வி.

“பொதுவா பறவைகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கிறதுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலையைத் தேடித்தான் இந்த மாதிரி ரொம்ப தூரம் பறக்குதுங்க!”

“அதுங்களுக்கு வழி எப்படி மாமா கரெக்டாத் தெரியும்?”

“ரொம்ப சுலபமாக் கேட்டுட்டே! இதைப் பத்தி நிறைய விஞ்ஞானிங்க இன்னமும் தொடர்ந்து ஆராய்ச்சி பண்ணிகிட்டேயிருக்காங்க. பறவைகளோட ஜீனிலேயே இந்த வழித்தடம் பத்தின செய்திகள் பதிவாகியிருக்கலாம்னு சிலர் சொல்றாங்க.

பூமியுடைய ஈர்ப்பு விசையை வைச்சு அதுக்குத் தகுந்தாப்போலே பறவைகள் ரூட் கண்டுபிடிக்குதுன்னும் சிலர் சொல்றாங்க.

சூரியனோட ஒளி, ஒளி சாயுற கோணம், ராத்திரியிலே நட்சத்திரங்களோட அமைப்பு இதையெல்லாம் வைச்சும் கூட இதுங்க கரெக்டான வழியிலே பறக்குதுங்கன்னும் சொல்றாங்க.

வழியிலே தென்படுகிற ஆறுகள், கடற்கரைகள், மலைத் தொடர்கள் அத்தனையையும் ஞாபகத்திலே நல்லாப் பதிய வெச்சுகிட்டுப் பத்திரமாத் திரும்ப வந்து சேருதுங்க. வழியிலே இருக்கிற சில வாசனைகளும் வழி கண்டுபிடிக்க யூஸாவுது!

புதுசா வலசை போவுற பறவைங்க கூட்டமாய்ப் பறக்கிறப்போ சீனியர் பறவைங்களை ஃபாலோ பண்ணிப் போவும்.”

“வலசை போறதுக்கு எதுனா குறிப்பிட்ட சீஸன் இருக்கா மாமா?” என்றாள் குமுதா.

“பகல் நேரம் ரொம்பக் கம்மியாவுற காலத்திலேயும், ரொம்பக் குளிர் சீஸனா இருக்கிறப்பவும், தீனி கிடைக்கிறது ரொம்பக் கொறஞ்சு போற சமயத்திலேயும் நிறையப் பறவைங்க வலசை போக அரம்பிச்சிருதுங்க.

பருவ கால மாற்றங்கள், இந்த மாதிரிப் பறவைங்க ஒடம்புலே ஒரு சுரப்பியைச் சுரக்க வைக்குதுன்னும் அதனாலே அதுங்க ரொம்ப தூரம் பிரயாணம் பண்ண ஆரம்பிச்சுருதுன்னும் சொல்றாங்க. சுருக்கமாச் சொன்னா அதுங்க ஒடம்புலேயே ஒரு கண்ணுக்குப் புலப் படாத காலண்டர் அதுங்களைக் கரெக்ட் டயத்துலே புறப்பட வைக்குதுன்னுகூடச் சொல்லலாம்.

பெரும்பாலான பறவைங்க வடக்கு - தெற்கு திசைகளிலேதான் வலசை போகுதுங்கிறது ரொம்ப முக்கியமான விஷயம்.”

“எப்படி மாமா இவ்ளோ தூரம் நான் ஸ்டாப்பாப் பறக்குதுங்க? அதுங்களுக்கு டயர்ட் ஆவாதா?” என்று ஆச்சரியமாய்க் கேட்டாள் பிரபா.

“சொல்றேன்மா! இந்த மாதிரி ரொம்ப தூர நான் - ஸ்டாப் பயணங்கள் போக அதுங்களுக்கு நிறைய என்ர்ஜி வேணுமில்லையா? அதுக்கும் அதுங்க ஒரு வழி பண்ணும். புறப்படுறதுக்கு 3 அல்லது 4 வாரம் முன்னாடியிருந்தே ஃபுல்லா சாப்பிட்டு அந்த சக்தியையெல்லாம் கொழுப்பா மாத்தி ஒடம்பிலே சேமிச்சு வெச்சுக்கும். பிரயாணத்தின்போது அந்தக் கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமாய்க் கரைஞ்சு அதுங்க பறக்கிறதுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும்.”

“பறக்கிற ரூட் வித்தியாசப் படுற மாதிரியே பறக்கிற வேகமும் இனத்துக்கு இனம் வித்தியாசப் படும்.

பெரிக்ரின் ஃபால்கன் அப்படிங்கிற பறவை வடமேற்குக் கனடாவிலிருந்து ஆர்ஜென்டைனா வரைக்குமான 15,000 கி.மீ தூரத்தை 174 நாள் பிரயாணம் பண்ணிக் கடக்கும். ஸ்வைன்சன்ஸ் ஹாக் அப்படிங்கிற பறவை 11,500 கி.ம.£ தூரத்தைக் கடக்க 126 நாள் எடுத்துக்கும்.

சிலது தனியாவோ அல்லது ஜோடியாவோ மட்டும் வலசை போவும். சிலது கூட்டங் கூட்டமாய்ப் போவும். உதாரணமா முரட்டுக் கால் ஹாக் (Buteo lagopus) அப்படிங்கிற பறவை பெரும்பாலும் தனியாத்தான் பறக்கும். தேன் பஸ்ஸார்ட் (Pernis apivorus) வகைப் பறவை ரெண்டு லட்சம் எண்ணிக்கை வரை ஒண்ணா வலசை போவும்.

சில இனங்களிலே ஆண் பறவை ஒரே இடத்தில் இருக்கும். பெண் பறவைகள் மட்டும் ரொம்ப தூரம் வலசை போய்க் குஞ்சு பொரிச்சு அதுங்களையும் கூட்டிகிட்டுச் சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்திடும்! சில நாடோடி வகைகளும் இருக்கு!” என்று நிறுத்தினார் ரேஞ்சர் மாமா.

“நாடோடி வகைகளா?” என்று ஆச்சரியப் பட்டாள் நூர்ஜஹான்.

“ஆமாம்மா! அதைப் பத்தியும் மத்த விவரங்களையும் அடுத்த தடவை பார்க்கிறப்போ சொல்றேன்” என்றபடி எழுந்தார் ரேஞ்சர் மாமா.
********************************************************************************


5 comments:

RRSLM said...

அருமை! மிக எளிமையான நடையில், ரசிக்கும் படி இருக்கிறது. நன்றி.

மங்களூர் சிவா said...

அருமையான தகவல்கள்.

உண்மைத்தமிழன் said...

தகவல்களுக்கு நன்றி ஸார்..!

நாஞ்சில் நாதம் said...

அருமையான, தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள்.

லதானந்த் said...

RR, மங்களூரார், உண்மைத் தமிழன் மற்றும் நாஞ்சில் நாதம்!
உங்களின் மேலான கவனத்தைச் செலுத்தி ஒதுக்கிப் பின்னூட்டம் இட்டதற்கு நன்றி!