Feb 6, 2011

பஞ்ச் ரத்தினம்

1) பாலியல் வக்கிரங்கள்

பாக்யா வார இதழில் பாலியல் வக்கிரங்கள் என்ற எனது தொடர். சாம்பிள் இதோ!

2) ஆர்வம் இருந்தும் செயல்பட முடியாமை

அதீதம் என்னும் பத்திரிக்கைக்கும் எனக்கும் இடையே நடந்த கடிதப் போக்கு வரத்து கீழே!

அதீதம்:

வணக்கம்.

பொங்கல் முதல் வெளியாகியிருக்கிற அதீதம் இதழுக்காக ஒரு புதிய தொடரை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். அதன் பொருட்டே இம்மடல்.

வெகு வருடங்களாக இணைய உலகைக் கவனித்து வந்து, திறனுடைய பலரையும் இன்னும் கொண்டு சேர்க்கும் வண்ணமும், புதியவர்களோடு சில பிரபலங்களும் எழுதுகையில் அந்தப் புதியவர்களுக்குக் கிடைக்கும் உத்வேகத்தையும் கருத்தில் கொண்டே இந்த இதழ் துவங்கப்பட்டுள்ளது.

ஆனால் - இணையத்தைக் கவனித்த வரை வார்த்தைக் கோர்வையின்மை, எழுத்துப் பிழை, சந்திப்பிழை என பலதும் மலிந்து காணப்படுகின்றன. நாங்கள் கணித்தவரையில் இவையேதும் இல்லாமல் எழுதும் அரிதான சிலபேர்களில் நீங்கள் முக்கிய இடத்தில் இருக்கிறீர்கள்.

உங்கள் பல வருட எழுத்துலகின் அனுபவத்தையும், அச்சு இதழ்களில் கோலோச்சிக் கொண்டிருக்கும் உங்கள் திறனையும் எங்களுக்காக ஒரு தொடர் எழுதித் தருவதில் செலுத்துவீர்களாயின் மிகவும் மகிழ்வோம்.

எங்கள் மனதில் இருப்பது: தவறில்லா தமிழோடு தெளிவான நடையோடுஎன்கிற தலைப்பில் ஒரு உதாரண பத்தியை தப்பும் தவறுமாக எழுதி, அதில் என்னென்ன தவறுகள் என்பதைச் சொல்லி கட்டுரையின் முடிவில் அதே பத்தியை சரியான முறையில் எழுதுவது எப்படி என்று சொல்ல வேண்டும்.

உதாரண பத்தி ஒரு பத்து வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. சுவாரஸ்யமாக அந்தப் பத்தி இருப்பின் வாசகர்களை எளிதில் கவரும் என்பதைத் தங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை!

புதிய இதழாகையால் தற்போது சன்மானமேதும் அளிக்கும் நிலையில் நாங்கள் இல்லை. நண்பர்களின் ஒத்துழைப்பில்தான் அதீதம் மலர்ந்திருகிறது. தாங்களும் ஒத்துழைப்பீர்களென நம்புகிறோம். எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்

......................

அதீதம் இதழுக்காக

நான்:

அன்புடையீர்!

வணக்கம். தங்களது மின் மடலைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.

தங்களின் அதீதம்இதழ் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.

மாதிரி இதழ் ஒன்றினை எனக்கு அனுப்புவீர்களேயானால் சில காரணிகளைக் கணிக்கவும், எனது எழுத்தின் நடை, மற்றும் கருத்துக்களை அதீதத்துக்குஏற்ற வகையில் அளிக்கவும் இயலும்.

எனது அலைபேசி எண் .................

இதில் தொடர்பு கொண்டு எனது அஞ்சல் முகவரியைப் பெற்று ஓர் இதழை எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.

தங்கள் அன்புள்ள,

லதானந்த்

அதீதம் :

அன்பின் லதானந்த்

மன்னிக்க.

அதீதம் இதழுக்கான இணைப்பைக் குறிப்பிடாமல் விட்டமைக்கு. மேலும் அது ஓர் இணைய இதழ் என்பதையும் எங்கேயும் சொல்லாததற்கு!

www.atheetham.com

நன்றி.

அன்புடன்

.............................

நான் :

அன்புடையீர்!

தங்களின் மின்னிதழ் பார்த்தேன்.

நன்றாக இருக்கிறது.

வாழ்த்துக்கள்.

தற்போது பணிச் சுமை அதிகம் இருக்கிறது. அது கொஞ்சம் குறைந்தவுடன் தங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்கிறேன்.

அன்புள்ள,

லதானந்த்

பணிச் சுமை அதிகம் என்பதால் ஆர்வம் இருந்தும் மின்னிதழுக்கு இப்போது எழுத முடியவில்லை என்பதில் எனக்கு லேசாக வருத்தம்தான்.

3) கடன்பட்டார் நெஞ்சம்

பொதுவாவே கடம் வாங்கறதில்ல குடுக்கறதில்லைங்கற ப்ரின்சிபிள் நம்முளுது. ஆனலும் பாருங்க சில தடவ கடம் வெச்சர்ர மாதிரி ஆயிருது. கடம்னா நெச நெசக் கடனெல்லாம் இல்ல. நெம்ப நாளுக்கு முந்தி நான் ஒரு வெண்பாப் போட்டி வெச்சிருந்தன். அதுல மொதோ ப்ரைஸ் அகரம் அமுதாவுக்கும் (அப்பா சாமிகளா! ரவுண்டு கட்டீராதீங்க! அகரம் அமுதாங்கிறது ஆம்பிளை) ரண்டாவது ப்ரைஸ் ஷைலஜாவுக்கும் கெடைச்சது. ரண்டு பேருக்குமே ப்ரைஸக் குடுக்காம இருந்ததால நெம்ப சங்கடமா இருந்துச்சு. சித்த நாளு முந்திக் கோயமுத்தூருக்கு ஷைலஜா வந்திருந்தாங்க. என்னைய நாவல்கள் எழுதச் சொல்லி நெம்ப வற்புறுத்துனாங்க. சிறுகதைகள் பத்தி நல்லா டிஸ்கஸ் பண்ணுனாங்க. அப்பம் அவிங்களுக்கு ரண்டாவது ப்ரைஸைக் குடுத்திட்டன். அகரம் அமுதாவுக்கும் (அகரம் அமுதா ஆம்பிளை. சரியா சாமிகளா!) மொதோ ப்ரைஸைக் குடுத்திட்டன்னா இந்தக் கட்டை நிம்மதியா வேகும்.

4) மின்னல்

இந்த வாரம் குங்குமத்தில் “மின்னல்” பற்றி ”எனப்படுவ”தில் எழுதியிருந்தேன். சென்ஸார் செய்யபட்டு விட்ட கடைசிப் பத்தி எனதருமை வலைப்பூ அன்பர்களுக்காகக் கீழே கொடுத்திருக்கிறேன்.

”தலையில் அடித்துக்கொள்ள வைக்கும் ஒரு நிகழ்ச்சி. ஜெர்மனியைச் சேர்ந்த ராண்டி ஜென்ஸ் கோட்லிப் மற்றும் அவரது கேர்ள் ஃபிரண்ட் லிசா க்ரூன் இருவரும் கார் மூலம் ஒரு ஹைவேயில் பயணம் செய்தனர். மூடு வந்ததால் காரை ஓரமாக நிறுத்திவிட்டுப் பக்கத்தில் இருந்த புதர்க் காட்டுக்குள் கொஞ்ச தூரம் நடந்து போய் காதல் மழையில் குளிக்க ஆரம்பித்தபோது நிஜ மழையே கொட்ட ஆரம்பித்துவிட்டது. போதாக் குறைக்கு இவர்கள் சங்கமித்திருந்த இடத்துக்கு சில அங்குலங்கள் தூரத்தில் மின்னல் வேறு பாய்ந்துவிட்டது. அலறி அடித்து எழுந்த இருவராலும் கொட்டும் மழைக்கிடையில் தங்கள் காரை நிறுத்திய இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வழியாக ஹைவேக்கு வந்த அவர்களைக் காரை ஓட்டி வந்த ஒருவர் அதிர்ச்சியுடன் கவனித்து லிஃப்ட் கொடுத்தார். அதற்கு முன் கைவசம் இருந்த துணிகளைக் கொடுத்து அழைத்து வந்தாராம்.”

”அது சரி! பத்திரிக்கைல வர்ரதைப் பதிவாகவும் போட்ருவியே? இப்பம் எதுக்கு இதை மட்டும் போட்ருக்கே?”னு சந்தேகம் வரலாம். அடுத்த ரத்தினத்தப் படியுங்கள். சந்தேகம் தீரும்.

5) மூடு விழா

பல்வேறு பணிகளுக்கிடையில் வலைப் பூவில் கடந்த சில மாதங்களாகவே அதிகமாக எழுத இயலாமல் இருந்தது. அனாலும் எனது எழுத்துக்களை ஆவணப் படுத்தி வைக்கும் களமாக வலைப் பூவைப் பயன்படுத்தி வந்தேன். கொஞ்ச நாளைக்குப் பொதுப் பார்வைக்கு அளிக்காமல் ஆவணப் படுத்துவதை மட்டும் தொடர்ந்து செய்தால் என்ன என்ற ஒரு சிந்தனை ஓடிக் கொண்டிருக்கிறது. சில இலக்குகளை அடைந்த பிறகு மீண்டும் பொதுப் பார்வைக்கு எனது இடுகைகள் வரும். சஞ்சய் கந்தி போன்ற கணிப் பொறி வல்லுநர்களின் உதவி கிடைத்தால் எனது வலைப் பூவுக்குக் கொஞ்ச நாள் மூடு விழா நடத்த உத்தேசித்திருக்கிறேன். (சாதாரண நாளிலேயே பிஸியாக இருப்பதாக சஞ்சய் காட்டிக் கொள்ளுவார். இப்போது கேட்க வேண்டுமா?)

என் வலைப் பூவைப் படித்தே ஆக வேண்டும் என்ற நம நமப்பு உள்ளவர்கள் எனக்கு ஈமெயிலில் தெரிவித்தால் இடுகைகளை அவர்களின் தனிப் பார்வைக்கு அனுப்புகிறேன். யாவற்றுக்கும் வந்தனம். வரட்டுங்களா?

********************************************************************************18 comments:

cheena (சீனா) said...

அன்பின் லதானந்த் - பாக்யாவில் வேறு எழுத ஆரம்பித்தாயிற்றா ? எங்கே அய்யா நேரம் இதற்கெல்லாம். ம்ம்ம்ம் இதில் சென்ஸார் பண்ணிய பகுதியும் இங்கே ..... ம்ம்ம் - லிப்ட் கொடுத்தவர் துணிமணியும் கொடுத்தாரா - பலெ பலே ! ம்ம்ம்ம்ம்ம்

ரவி said...

லிப்ட் கொடுப்பவர் என்ன துணிக்கடைக்காரரா :))))

அகரம் அமுதா நல்ல பஞ்ச். ரெண்டு எடத்துல வருதே ??

ஏன் இந்த வலைப்பூ தனிப்பார்வை ப்ளான் ?

பத்மநாபன் said...

முன்று முக்கிய பத்திரிக்கையில் தொடர்கள் .. வலைப் பத்திரிக்கை அழைப்புகள்.. பதில்கள்..அலுவலக பணிகளுக்கு இடையில் எப்படி நேரமேலாண்மை செய்கிறீர்கள் என்பது ஆச்சர்யம்...

ஆவணப்பணிகளை செய்யுங்கள்...இடையில் உங்கள் தொடர்களையும் போட்டால் எங்கள் மாதிரி புத்தகம் வாங்கிப் படிக்கும் வாய்ப்பில்லாதவர்களுக்கு ( நாடு விட்டு தள்ளி ) உதவியாக இருக்குமே.. உங்களுக்கு சிரமமில்லாத/வேறு எதுவும் பிரச்சனை இல்லாத பட்சத்தில் இதையும் ஆவன செய்யுங்கள்...

கொல்லான் said...

//கொஞ்ச நாள் மூடு விழா நடத்த//
எனது ஆட்சேபங்கள்.

Unknown said...

//என் வலைப் பூவைப் படித்தே ஆக வேண்டும் என்ற நம நமப்பு உள்ளவர்கள் எனக்கு ஈமெயிலில் தெரிவித்தால் இடுகைகளை அவர்களின் தனிப் பார்வைக்கு அனுப்புகிறேன்//

jaisankarj@gmail.com க்கு அனுப்புங்க

லதானந்த் said...

சீனா!
பாக்யாவில் ஏற்கனவே வந்த தொடர் இது. நேர மேலாண்மைக்கு எனது ’முக்கிய’ டெக்னிக் டாய்லட்தான். சும்மா எதிர்ல இருக்கிற சுவரை வெறிச்சுப் பாத்துகிட்டு ’ஒக்காராம’ நாளிதழ் படிக்கிறது, ’முக்கிய’க் குரிப்புகளை “வெளி’ யாக்குறது எல்லாம் அங்கதான். ஹிஹி!

செந்தழலார்!
(எல்லாம் ஒருபயம் கலந்த மரியாதைதான்)
அகரம் அமுதா ரண்டு எடத்துல வர்ரதப் பத்திக் கேட்ருக்கீங்க. ஒட்டிக்கு ரெட்டியா இருந்தா நல்லதுதான?
அப்பறம் லிஃப்ட் குடுத்தவரு துணிக் கடக் காரரானு கேட்ருக்கீங்க. ஃபாரினல்யெல்லாம் டொப்பி, கோட்டு, டை, பூடிசு, சாக்ஸெல்லாம் போட்டுக்குவாங்கனு கலிஃபோர்னியாத் தோழி சொல்லியிருக்காங்களே! காரை ஓட்டிகிட்டு வந்த ஆளு குடுத்த டொப்பிய வாங்கி அந்த அம்மிணி மூஞ்சிய மூடிக்கிச்சு. அப்புறம் அவரு டைய வாங்கி... வேண்டாம் விடுங்க!

பத்மனாபன்!
அதான் ஈமெயில்லயே அனுப்பறன்னு சொல்றனே?

கொல்லான்!
Objection over ruled.

ஜெய்ஷங்கர்!
அனுப்பறேன்.

CS. Mohan Kumar said...

சுஜாதா, பாலகுமாரன் எல்லாம் ஒரே நேரத்தில் மூணு புக்கில் எழுதினாங்க. இப்போ நீங்க (குங்குமம், கல்கி, பாக்யா) கலக்குங்க

நிகழ்காலத்தில்... said...

என்னையும் இணைத்துக்கொள்ளவும்

arivhedeivam@gmail.com

நிகழ்காலத்தில்... said...

அதீதத்திற்கான பதில் ரத்தினமாக 3 கடன்பட்டார் நெஞ்சம் அமைதுள்ளது:)))

அடுத்த ரத்தினம்...:)))))

Unknown said...

வாழ்த்துக்கள் ???
Is it a correct spelling
வாழ்த்துகள் என இருக்கணும்

லதானந்த் said...

மோகன் குமார்!
துணுக்கு எழுத்தாளனாகிய என்னைய ஓவராப் புகழுறிங்க.

நிகழ் காலத்தில்!
கொஞ்சம் புரியற மாதிரி எழுதுங்க ப்ளீஸ்.

சந்திர மௌளீஸ்வரன்!
வாழ்த்துக்கள் என்பதே சரி என நினைக்கிறேன்.

முத்துக்கள், வாத்துக்கள், கூத்துக்கள் என்பன போன்று!

தகர உகரம் பன்மையிற் பேசும் போது ஒற்று இரட்டிப்பதே இயல்பென்றறிக.

அமர பாரதி said...

லதாந்த் சார்,

பஞ்ச் ரத்தினம் நன்றாக இருந்தது. என்னுடைய ஈமெயிலை உங்களுக்கு அனுப்புகிறேன். பதிவுகளை தயவு செய்து அனுப்பவும். பதிவுகள் லே-அவுட் நன்றாக இல்லையே. இப்போதெல்லாம் பத்திரிக்களில் கூட பாரா ஆரம்ப வார்த்தைக்கு இன்டென்ட் செய்வதில்லை.

கொல்லான் said...

//தகர உகரம் பன்மையிற் பேசும் போது ஒற்று இரட்டிப்பதே இயல்பென்றறிக.//
இப்படி அடிக்கடி எங்களுக்குத் தமிழ் பாடம் எடுக்கற வாத்தியார், கடையை கொஞ்ச நாளைக்கு மூடுறேன்னு சொன்னா நாங்க என்ன பண்றது?

லதானந்த் said...

அமர பாரதி!
1) ”லதாந்த்” என்று அழைத்திருக்கிறீர்களே யார் அவர்?
2) பதிவுகள் எழுதினால் கட்டாயமாக உங்களுக்கு அனுப்புகிறேன்.
3)லே அவுட் கவனிக்கிறேன்.

கொல்லான்!
எதுக்குமே இடைவெளி இருக்கிறது நல்லதுதானே? அந்த மூணு நாட்கள் மாதிரி

Unknown said...

"பஞ்ச(ச்) ரத்தினம்"

கொல்லான் said...

//ஆர்வம் இருந்தும் செயல்பட முடியாமை//

இதுக்கு வேறேதும் உள்ளர்த்தம் இருக்குதுங்களா?

மதுரை சரவணன் said...

vaalththukkal

லதானந்த் said...

ஆகாய மனிதன்!
ஆ(ம்) மனிதன்!

கொல்லான்!
உள்குத்து என்பதில் உள்குத்து எதுவும் இல்லையல்லவா?

ம.சரவணன்!
சந்திர்ட மௌளீஸ்வரனுக்கும்வாழ்த்து(க்)களைச் சொல்லிருங்க